போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறையைக் குத்தகைக்கு எடுத்துள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் மிகப் பெரிய பங்குதாரரின் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் கடப்பாடோ அக்கறையோ தமக்கில்லை என்று கூறியுள்ளார்.
அந்தப் பங்குதாரருடன் தமக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அவர் தெரிவித்ததாக சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி அறிவித்துள்ளது.
ஏஇஎஸ் டெண்டருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது 2006-இல். அமைச்சரவை அவ்விரு நிறுவனங்களுக்கும் குத்தகையைக் கொடுத்தது 2008-இல். இது தாம் போக்குவரத்து அமைச்சர் ஆவதற்கு முன் நிகழ்ந்தது என்றவர் விளக்கினார்.
திங்கள்கிழமை, பிகேஆர் மத்திய செயலவை உறுப்பினர் சாங் லி காங், ஏஇஎஸ் குத்தகையைப் பெற்ற இரண்டு நிறுவனங்களில் ஒன்று ஜோகூர் அம்னோவுடன் தொடர்புள்ளது என்று கூறியிருந்தார்.
அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரரின் தந்தை ஜோகூர் அம்னோ தொகுதி ஒன்றின் தலைவர் என்றும் தாயார் ஜோகூர் அம்னோ மகளிர் பகுதி துணைத் தலைவர் என்றும் அவர் கூறியிருந்தார்.