ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கப்படும் கட்டுமான மதிப்பீட்டாளர் அகமட் அப்துல் ஜலிலின் கிள்ளான் குடும்ப வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் இன்று காலை மணி 6.20 வாக்கில் அவரது குடும்ப வீட்டுக்கு வந்தனர். அந்தத் தகவல் குறித்து மலேசியாகினிக்கு அகமட்டின் வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி தகவல் கொடுத்தார்.
ஏஎஸ்பி தான் என்பவர் தலைமையில் வந்த போலீஸ் குழுவினர் குடும்பத்தினரைச் சந்தித்ததுடன் அவர்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விரும்பினர் என அகமட்டின் சகோதரி ஆஸியா கூறினார்.
அகமட்டின் தந்தை, சகோதரர்களான அடாம், அலி உட்பட மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குமூலத்தை பதிவு செய்ய விரும்புவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
“அகமட்டின் வழக்கு முடியும் வரை, எங்கள் வழக்குரைஞர் உடன் இருக்கும் வரையில் நாங்கள் எங்கள் வாக்குமூலத்தை கொடுக்க மறுத்து விட்டோம்,” என அந்த 30 வயதான சட்டக் கல்வி மாணவி மலேசியாகினியிடம் சொன்னார்.
“ஆனால் போலீசார் மிகவும் தொழில் ரீதியாக நடந்து கொண்டனர். நாங்கள் முறையாக ஆடைகளை அணியும் வரை காத்திருந்த பின்னர் வீட்டில் சோதனைகளை நடத்தினர்,” என்றார் அவர்.
“முதலில் நாங்கள் அச்சுறுத்தப்படுவதாக கருதினோம். ஆனால் போலீஸ்காரர்கள் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் வேலைகளை மட்டுமே செய்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியும்.”
“அகமட்டின் பாதுகாப்புக்காகவும் விடுதலைக்காகவும் நாங்கள் போலீசாருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக நாங்கள் உறுதி அளித்தோம்,” என ஆஸியா மேலும் கூறினார்.
முக நூல் பதிவு
27 வயதுடைய கட்டுமான மதிப்பீட்டாளரான அகமட் முகநூல் பதிவு ஒன்றில் ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக கூறப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுவதற்காக கடந்த வெள்ளிக் கிழமை ஜோகூர் பாருவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட போது அவர் மீண்டும் தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அகமட்டின் மூன்று நாள் தடுப்புக் காவல் இன்று முடிவடைகின்றது. ஆனால் அந்த விவகாரம் தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக இது வரை தெரியவில்லை என வழக்குரைஞர் பாடியா கூறினார்.
அகமட்டுக்காக நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், போராளிகள் நடத்திய மெழுகுவர்த்தி விழிப்பு நிகழ்வில் அவருடைய 10 உடன்பிறப்புக்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.
கிரிமினல் அவதூறுக்காக மலேசியாகினி மீதும் மலேசியா இன்சைடர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 500வது பிரிவின் கீழ் போலீசார் இரண்டு புகார்களைச் செய்துள்ளதாக ஜோகூர் பாரு குற்றப் புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் நோர் அஜிஸான் அனான் கூறினார்.
போலீசார் தங்கள் விசாரணையில் உதவுவதற்காக அகமட் குடும்ப உறுப்பினர்களையும் விசாரிப்பர் என்றும் நோர் அஜிஸான் தெரிவித்திருந்தார்.
எந்த முகநூல் பதிவு அரச குடும்பத்தைப் புண்படுத்தியுள்ளது என்பது அகமட்டுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இது வரை தெரியாது.