மலேசிய தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் அகமட் அப்துல் ஜலில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்காக நவம்பர் 28ம் தேது நீதிமன்றத்துக்கு அவர் வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“அவர் விடுவிக்கப்பட்டதற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்,’ என பாடியா சொன்னார்.
அகமட்டின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும் ஜாமீன் தொகையைச் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அகமட் பாதுகாப்பாக இருப்பது குறித்து குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
27 வயதுடைய கட்டுமான மதிப்பீட்டாளரான அகமட் முகநூல் பதிவு ஒன்றில் ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக கூறப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுவதற்காக கடந்த வெள்ளிக் கிழமை ஜோகூர் பாருவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு மேலும் மூன்று நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டார்.
அகமட்டுக்காக நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், போராளிகள் நடத்திய மெழுகுவர்த்தி விழிப்பு நிகழ்வில் அவருடைய 10 உடன்பிறப்புக்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.
இன்று காலையில் ஏஎஸ்பி தான் என்பவர் தலைமையில் நான்கு ஜோகூர் போலீஸ் அதிகாரிகள் கிள்ளானில் உள்ள அகமட்டின் குடும்ப இல்லத்துக்குச் சென்றனர். அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
“போலீசார் சட்டத்துக்கு ஏற்ப தொழில் ரீதியாக செயல்பட்டு தமது சகோதரரின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தால்” போலீசாருக்கு குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்குவர் அகமட்டின் மூத்த சகோதரியான ஆஸியா கூறினார்.