ஜோகூர் அம்னோவுடன் தொடர்பா? மறுக்கிறது ஏஇஎஸ் குத்தகை நிறுவனம்

மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)யைக் குத்தகைக்கு எடுத்துள்ள பேத்தா தெகாப் சென். பெர்ஹாட், அதற்கு ஜோகூர் அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.

“பேத்தா தெகாப்(Beta Tegap)சென். பெர்ஹாட், அந்நிறுவனத்துக்கு அம்னோவுடன் உறவோ தொடர்போ இல்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகிறது”, என்று பேத்தா தெகாப் தலைவர் நிக் இஸ்மாயில் நிக் முகம்மட் இன்று மலேசியாகினிக்கு அனுப்பி வைத்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பேத்தா தெகாப்பின் மிகப் பெரிய பங்குதாரரான ரொஸானா-வின் காலஞ்சென்ற தந்தையார் ரிட்சுவான் சலிம் ஓர் அம்னோ உறுப்பினர் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் காலமாகி விட்டார்.

“பத்தாண்டுகளுக்கு முன்பே அவர் காலமாகிவிட்டதால் அவரது குடும்பத்தைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்”, என்றவர் கூறினார்.

ஏஇஎஸ் முறையை அமல்படுத்தவும் நிர்வகிக்கவும் குத்தகை வழங்கப்பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று பேத்தா தெகாப்.

தொடர்புகளை வைத்து குத்தகை கொடுக்கப்படவில்லை

திங்கள்கிழமை பிகேஆரின் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லீ காங் (இடம்), பேத்தா தெகாப் அம்னோவுக்கு வேண்டப்பட்ட நிறுவனமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். ரொஸானாவின் பெற்றோர் இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதையும் இப்போது மாச்சாப் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள ஹமிட் அப்துல் ரஹ்மான் அவரின் உறவினர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேத்தா தெகாப்புக்கு குத்தகை வழங்கப்பட்டது குறித்து விவரித்த நிக் இஸ்மாயில், போக்குவரத்து அமைச்சு மற்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள ஏஇஎஸ் முறைகளை விரிவாக ஆராய்ந்து பார்த்தது என்றார்.

“2007-இல் ஒன்பது நிறுவனங்கள் மலேசிய சாலைகளில் அவற்றின் முறைகளை நேரடியாக செய்துகாட்ட அழைக்கப்பட்டன.

“ஏழு நிறுவனங்கள் அழைப்பை ஏற்று கத்ரி நெடுஞ்சாலையிலும் புத்ராஜெயாவிலும் நடைபெற்ற சோதனைகளில் கலந்துகொண்டன.

“நேரடியாக நடைபெற்ற அச்சோதனைகளில் நாங்கள் காட்டிய திறனையும் எங்கள் வெளிநாட்டுப் பங்காளிகளின் நிபுணத்துவத்தையும் அடிப்படையாக வைத்து பேத்தா தெகாப் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றபடி, அது தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எவருடனும் எங்களுக்குள்ள தொடர்புகள் காரணம் அல்ல”, என்றவர் கூறினார்.

TAGS: