அதிர்ச்சி அடைந்துள்ள அகமட் சொந்தப் பாதுகாப்புக்கு போலீசில் புகார் செய்தார்

ஜோகூர் சுல்தானை புண்படுத்தியதாக கூறப்பட்ட முகநூல் பதிவு மீது கைது செய்யப்பட்டு ஜோகூர் பாருவில் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அகமட் அப்துல் ஜலில் தமது சொந்தப் பாதுகாப்புக்கு அஞ்சி போலீசில் புகார் செய்துள்ளார்.

நேற்றிரவு 7 மணி வாக்கில் புகார் செய்வதற்காக அகமட்-உடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஷா அலாம் போலீஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக அவரது மூத்த சகோதரி ஆஸியா தெரிவித்தார்.

“எங்களுடன் எங்கள் வழக்குரைஞரும் உடன் வந்தார். தடுத்து வைக்கப்பட்டிருந்தது முதல் எங்களுக்குக் கிடைத்த அச்சுறுத்தல் மருட்டல் காரணமாக நாங்கள் புகார் செய்தோம்,” என அந்த 30 வயது சட்டக் கல்வி மாணவி மலேசியாகினியிடம் சொன்னார்.

ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸாம்ரி பாக்கார், நேற்று அகமட்டை ஏழு நாள் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்தார். தொடக்கத்தில் அவர் அரசகுடும்பத்தை எந்த முகநூல் பதிவில் அவமானப்படுத்தியுள்ளார் என்பது தெரிவிக்கப்படாமலேயே தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அகமட் இப்போது ஜோகூர் சுல்தானை அவமதித்ததாக இரண்டு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். ‘Zul Yahya’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த முகநூல் கணக்கில் தம்போய் கம்போங் பாசிரில் உள்ள தேவான் தான் ஸ்ரீ முகமட் ரஹ்மாட் மண்டபத்தில் அக்டோபர் 21ம் தேதி பிற்பகல் 3 மணி வாக்கில் அவர் அந்த அவமானப்படுத்தும் பதிவைச் சேர்த்ததாக  முதல் குற்றச்சாட்டு கூறியது.

அதே போன்ற குற்றத்தை அக்டோபர் 10ம் தேதி மாலை 6 மணி வாக்கில் ஜோகூர் போலீஸ் தலைமையக ஊடக மய்யத்தில் புரிந்ததாக அந்த 27 வயது கட்டுமான மதிப்பீட்டாளர் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

அந்த விவரங்களை நேற்று பெர்னாமா வெளியிட்டது.

1998ம் ஆண்டுக்கான தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(ஏ)ன் கீழ் அந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கான தண்டனை அதே சட்டத்தின் பிரிவு 233 (3)ல் குறிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது ஒராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவர் அதே குற்றத்தைத் தொடர்ந்து புரிந்தால் ஒவ்வொரு நாளைக்கும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் கூடுதலாக விதிக்கப்படலாம்.

அகமட் முகநூல் பதிவு ஒன்றில் ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக கூறப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுவதற்காக கடந்த வெள்ளிக் கிழமை ஜோகூர் பாருவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட போது அவர் மீண்டும் தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேலும் மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.

9 உடன் பிறப்புக்களைக் கொண்டுள்ள அகமட் குடும்பம் பினாங்கைச் சார்ந்ததாகும். அவர் தற்போது கோலாலம்பூரில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஜோகூர் பாருவைச் சேர்ந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை மணி 6.20 வாக்கில் அகமட் அப்துல் ஜலிலின் கிள்ளான் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

“எங்கள் வழக்குரைஞர் உடன் இருக்கும் வரையில் நாங்கள் எங்கள் வாக்குமூலத்தை போலீசுக்குக் கொடுக்க மறுத்து விட்டோம்,” என ஆஸியா கூறினார்.

“சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்காக” அகமட் இன்று பிற்பகல் 3 மணி  வாக்கில் பெட்டாலிங் ஜெயா செக்சன் 8 போலீஸ் நிலையத்தில் புகார் செய்வார்.

அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.