கட்சிதாவ ரிம150,000 கொடுக்க முன்வந்தார்கள்-டிஏபி சட்டமன்ற உறுப்பினர்

பெண்டியான் சட்டமன்ற உறுப்பினர் க்வி தியோங், டிஏபியைவிட்டு விலகி சுயேச்சை உறுப்பினராக பிரகடனம் செய்துகொண்டால் தமக்குப்  பணம் கொடுக்க பிரதமரைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட சில தரப்பினர் முன்வந்தனர் என இன்று தெரிவித்தார்.

கட்சியிலிருந்து விலக ஒப்புக்கொண்டால், ரிம150,000 ரொக்கமும் 50 ஏக்கர் நிலமும், மாத அலவன்சாக குறைந்தது ரிம5,000-மும் ஒரு சேவை மையமும், ஓர் உதவியாளரும் கொடுக்க முன்வந்தார்கள் என்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் க்வீ கூறினார்.

முதன்முதலாக செப்டம்பர் 26-இல், ஜோகூர் பாரு வீ குலத்தோர் சங்கத் தலைமைச் செயலாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்தார். அடுத்த தேர்தலில் க்வீ போட்டியிட விரும்பினால் அதற்கும் ஆதரவு வழங்கப்படும் என்று அவரிடம் உறுதிகூறப்பட்டதாம்.

நான்கு நாள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நடந்த உரையாடலை க்வீ ஒலிப்பதிவு செய்துவிட்டார். அதன் எழுத்துப்படிவம் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தம்மைப் பிரதமரின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட அந்த  ‘முகவர்’ மத்திய அரசிடமிருந்து பணம் வரும் என்றும் ஆனால் சங்கத்தின்வழியேதான் அது அவருக்குக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

செப்டம்பர் 30-இல், மென்டரின் மொழியில் நடந்த அந்த உரையாடலின் ஒலிப்பதிவு செய்தியாளர் கூட்டத்தில் போடப்பட்டுச் செய்தியாளர்களும் அதைச் செவிமடுத்தனர்.

செப்டம்பர் 28-இல் அந்த ‘முகவரும்’ பிரதமர்துறையைப் பிரதிநிதிப்பதாக அறிமுகம் செய்துவைக்கப்பட்ட ஒரு மலாய்க்காரரும் முதல் தவணைப் பணமான ரிம50,000 கொடுப்பதற்காகத்  தம்மைச் சந்தித்தார்கள் என க்வீ கூறினார்.

“அந்த மனிதர் எனக்காக வருத்தப்படுவதாகக் கூறினார். இருவரும் ஒரே குலம் என்பதால் எனக்கு உதவ விரும்புவதாக குறிப்பிட்டார்……..

“ஆனால் நான் எப்போதும் டிஏபிதான். பிஎன் பேரம் பேசியது சரியல்ல. அதை நான் அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். எல்லா டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களையும் எம்பிகளையும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை பிஎன்னுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.நான் கட்சியை நேசிக்கிறேன். என் ஒரே கட்சி டிஏபிதான்”, என்று கண்களில் நீர்மல்கக் கூறினார் க்வீ.

நஜிப்புடன் சந்திப்புக்கு ஏற்பாடு

முகவருடன் வந்த அந்த மலாய்க்காரர், அக்டோபர் 3-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதிகூறினாராம்.

செப்டம்பர் 29-இல், இவ்விவகாரத்தை டிஏபி மத்திய நிர்வாகக் குழுவிடம் தெரிவித்த க்வீ, இன்று மூவார் போலீஸில் புகார் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.  

அடுத்த வாரம், பகாங் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலும்(எம்ஏசிசி) அவர் புகார் செய்வார். பெண்டியான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள  மூவாரில் எம்ஏசிசி அலுவலகம் இல்லை.

க்வீ கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கட்சியின் நிதி நிர்வாகத்தில் நிகழ்ந்த சில முறைகேடுகளின் தொடர்பில் செப்டம்பர் 24-இல் அவர் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

TAGS: