பக்காத்தான்-ஆதரவு அமைப்பு ஒன்று, மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)க்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தியாவான், லூமுட்டில் உள்ள போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா-வின் நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்துக்குமுன் கண்டனக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியது.
பிற்பகல் மணி 2-க்கு நடத்தப்பட்ட அக்கண்டனக் கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டதாக பந்தா ஏஇஎஸ் (Bantah AES) என்னும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சைபுல்லா சுல்கிப்ளி நேற்று விடுத்த அறிக்கையொன்றில் கூறியிருந்தார்.
அவர், ஏஇஸ்-ஸை நிராகரிப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிடும் மகஜர் ஒன்றைச் சேவை மையத்தில் ஒப்படைத்தார்.கொங், லுமுட்டில் இருந்தாலும் மகஜரைப் பெற்றுக்கொள்ள அவர் வரவில்லை.
“கொங் மக்களைச் சந்திக்க அஞ்சும் கோழையாக இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்துக் கொண்டோம்.மகஜரைப் பெற்றுக்கொள்ள அலுவலக ஊழியர் ஒருவரை மட்டும் அனுப்பி வைத்திருந்தார்”, என்றவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஏஇஎஸ் என்பது என்பது நாடு முழுக்க 1.300 இடங்களில் நவீன கேமிராக்களைப் பொருத்தி வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் பல-மில்லியன் ரிங்கிட் திட்டமாகும். அதற்கான குத்தகை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு-வாரக் கெடு
கொங் எதிர்வினை ஆற்றவும் ஏஇஎஸ்ஸை மீட்டுக்கொள்ளவும் ஒரு வாரம் அவகாசம் கொடுப்பதாக சைபுல்லா கூறினார். அதைச் செய்ய தவறினால் நாடாளுமன்றத்தில் இன்னொரு பேரணி நடத்தப்படும் என்றவர் எச்சரித்தார்.
அந்த அமைப்பு சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறது. ஆனால்,அதற்காக மக்களின் நலனைப் பலியிடக்கூடாது என்று பிகேஆர் இளைஞர் துணைச் செயலாளருமான அவர் குறிப்பிட்டார்.