‘கருத்துக்களை’ பெறுவதற்காக இந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது.
ஆனால் அந்தக் கூட்டத்துக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தம் உண்டு எனச் சொல்லப்படுவதை அது மறுத்தது.
நவம்பர் 24ம் தேதி அந்தச் சந்திப்பு நிகழும் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் அறிவித்தார்.
அந்தச் சந்திப்புக்கு ‘Himpunan Barisan 1Malaysia’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரசாங்கக் கொள்கைகள் மீது சிவில் சமூகம் கொண்டுள்ள எண்ணங்களை திரட்டுவதே அந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
அகமட் அதன் ஏற்பாட்டுக் குழு செயலகத் தலைவரும் ஆவார். அந்தக் கூட்டத்தை அம்னோவோ அல்லது பிஎன் -னோ அல்லது அரசாங்கமோ ஏற்பாடு செய்யவில்லை என்றும் ‘Barisan 1Malaysia’ என்னும் பெயரை மட்டுமே அது கொண்டிருக்கும் என்றும் அகமட் சொன்னார்.
அது கட்சிச் சார்பற்ற நிகழ்வா என வினவப்பட்ட போது “என்னைப் பாருங்கள், நான் கட்சிச் சார்பற்றவனைப் போல தோற்றமளிக்கிறேனா ? கட்சிச் சார்போ இல்லையோ பொது மக்கள் முடிவு செய்ய நான் அதனை விட்டு விடுகிறேன்,” என்றார் அவர்.
அது தேர்தலுக்கு முன்னதாக பிஎன் -னுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதா என்றும் அகமட்-டிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ” இல்லை. எங்கள் நடவடிக்கைகள் அதனை எண்ணமாக கொண்டிருக்கவில்லை,” என்றார்.
“நாங்கள் சிவில் சமூக அமைப்புக்களுடைய கருத்துக்களைப் பெறுவதற்காக அவற்றுடன் உருப்படியான விவாதங்களை நடத்துவோம்.’
“எடுத்துக்காட்டு ஏஇஎஸ் என்ற இயல்பான அமலாக்க முறை, பிடிபிடிஎன், தேசியக் கல்விப் பெருந்திட்டம் ஆகியவை பற்றிய கருத்துக்களைப் பெறுவோம்.”
“பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவோம்,” என்றார் அகமட்.
அவர் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசினார்.
புத்ரா உலக வாணிக வளாகத்தில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல பிரமுகர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சமூகப் போராளிகளான சந்திரா முஸாபார், லீ லாம் தாய், மலேசிய அனைத்துலகப் பல்கலைக்கழகத் தலைவர் ஸாலேஹா கமாருதின் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
பொருளாதாரம், சமயம், வரலாறு, சமூகம் ஆகிய அம்சங்களில் விவாதங்கள் நிகழும்.