மஇகா பத்து மலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை பழனிவேல் தற்காக்கிறார்

பத்துமலைக் கோயிலில் மஇகா தனது திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை அதன் தலைவர் ஜி பழனிவேல் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

அது அனைத்து இந்தியர்களும் வருகையாளர்களும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சிகரமான விழா ஆகும் என்றார் அவர்.

அரசியல் ஆதாயம் பெற எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

“அந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர். மஇகா மக்கள், இந்திய சமூகத்தினர் மட்டுமின்றி சுற்றுப்பயணிகள் உட்பட வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சார்ந்த மக்களும் அதில் கலந்து கொள்வர்,” என அவர் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா செலத்தானில் உதவி தேவைப்படும் 400 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

பத்துமலையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து செய்தி இணையத் தளம் ஒன்றில் வெளியான கட்டுரை பற்றிப் பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் கருத்துரைத்தார்.

பல ஆண்டுகளாக மஇகா திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு கூட அது ஒரு கோவிலுக்கு அருகில் நடத்தப்பட்டது. அதில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள் என அவர் சொன்னார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான மஇகா வேட்பாளர்கள் பற்றிக் குறிப்பிட்ட பழனிவேல் தாம் தேர்தலுக்குச்  சிறந்த பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.

“நாங்கள் மஇகா பாரம்பரிய பகுதிகளுக்கு எந்த வெளியாரையும் கொண்டு வரப் போவதில்லை. வெளியார் தேர்வு செய்யப்பட்டால் நாங்கள் அதனை நிராகரிப்போம்.”

“அந்த வேட்பாளர் மஇகா-வைச் சார்ந்தவராக, கட்சியில் அனுபவம் உடையவராக, கட்சிக்குத் தெரிந்தவராக, கட்சியில் பிரபலமானவராகவும் பதவியை வகிப்பராகவும் இருக்க வேண்டும். அந்த தகுதிகளைக் கொண்டுள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்படுவார்கள்,” என பழனிவேல் மேலும் கூறினார்.

பெர்னாமா