பிஎன் மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்கின்ற நம்பிக்கைகளை திணிக்காத மிதவாத சக்தி என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார்.
“சமயம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் தனி நபர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற இணக்கமான, மிதவாத அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலேசியா பல இனங்களை கொண்டதாகும்.”
“நமது நம்பிக்கைகளை நாம் மற்றவர்கள் மீது திணித்துக் கொண்டே போக முடியாது. அது ஜனநாயகம் அல்ல. இரட்டை வேடமாகும்,” என இன்று வெளியிட்ட தமது தீபாவளிச் செய்தியில் சுவா குறிப்பிட்டுள்ளார்.
எல்லா இனங்களுக்கும் இடையில் சம சீரான நிலையைக் கட்டிக் காப்பது மிகவும் சவால் நிறைந்தது எனக் குறிப்பிட்ட அவர், அதில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு போதுமான அனுபவம் இல்லை என்றார். அதுவும் ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்பும் பாஸ் எண்ணத்தைக் கருத்தில் கொண்டால் அது மிகவும் கடினமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சமூகத்தின் எல்லா நிலைகளுக்கும் அதிகமான நன்மைகள் கிடைப்பதற்கு ஊக்கமுட்டும் பொருட்டு மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதோடு அதன் மீது நம்பிக்கையும் வைக்க வேண்டும்.”
அரசாங்கக் கொள்கைகளும் அரசியல் நிலைத்தன்மையை அது வழங்கியுள்ளதாலும் நாடு மகத்தான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக சுவா கூறினார்.
தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் தோட்டங்களில் உள்ள மலேசிய இந்தியர்களுக்கு பயிற்சிகளை வழங்க மேலும் 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
தீபாவளி மலேசியாவின் பல பண்பாட்டு அமைப்பில் பிரிக்க முடியாத பகுதி என்றும் சிறந்த நாட்டை உருவாக்க மலேசியர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அந்த மசீச தலைவர் கேட்டுக் கொண்டார்.