13வது பொதுத் தேர்தல் எந்த வழியிலும் போகலாம் என்கிறார் லிம் கிட் சியாங்

அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த வழியிலும் போகலாம் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார்.

பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமோ என்றோ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்றோ அம்னோ தலைவர்கள் உட்பட யாரும் நம்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

“ஆகவே அம்னோ/பிஎன் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுமா பெறாதா என்பதே உண்மையான பிரச்னையாகும். ஏனெனில் பிஎன் அல்லது பக்காத்தானுக்கு 20 இடங்கள் பெரும்பான்மை கிடைக்கும் என 13வது பொதுத் தேர்தல் போக்கை கண்காணிக்கின்றவர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.”

“அதனை வேறு வகையாகச் சொன்னால் 13வது பொதுத் தேர்தல் காசை சுண்டிப் போடுவதைப் போல இருக்கும். ஒன்று கூட்டரசு அதிகாரத்துக்கு பின் மீண்டும் திரும்பலாம் அல்லது அம்னோ ஆதிக்கத்தை உடைத்து பிஎன் -னுக்குப் பதில் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவில் மத்திய அரசாங்கத்தை அமைக்கலாம்,” என லிம் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காரணம் அந்தத் தேதியில் நாடாளுமன்றத்தின் நடப்புத் தவணைக் காலம் முடிவுக்கு வருகின்றது.

தேர்தல் தேதி கடந்த இரண்டு ஆண்டுகளாக “தேசிய ஊக விளையாட்டாக” மாறி விட்ட போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல்களை அறிவிப்பதற்கு இன்னும் தயங்குகிறார். ஏனெனில் தமக்கு முந்திய அப்துல்லா அகமட் படாவிக்கு நேர்ந்தது தமக்கும் நிகழக் கூடாது என அவர் எண்ணுவதாகும்.”

அதனைச் செய்வதற்கு நஜிப், 2008 பொதுத் தேர்தலைக் காட்டிலும் உயர்வான வெற்றிகளை- அதாவது 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 149ஐ கைப்பற்றுவது அல்லது சிலாங்கூரை மீண்டும் பிடிப்பது-  பிஎன் பெறக் கூடிய நேரத்தில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் என ஈப்போ தீமோர் எம்பி-யுமான லிம் சொன்னார்.

“எப்போது 13வது பொதுத் தேர்தலை நடத்துவது என்பது மீது, கடந்த இரண்டு ஆண்டுகளாக மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நஜிப்பிடம் கூட அதற்கான பதில் கிடையாது என்பது தான் மிகவும் வினோதமாகும்.”

2008 தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்த பின்னர் பதவி விலகுமாறு அப்துல்லாவை அவரது சொந்தக் கட்சியே நெருக்கியது. இறுதியில் அவர் 2009ம் ஆண்டு ஐந்தாவது பிரதமர் பதவியையும் அம்னோ தலைவர் பதவியையும் துறந்தார்.

எந்த அரசியல் கூட்டணி மற்ற நலன்களுக்கு மேலாக தேசிய நலனை வைக்கத் தயாராக உள்ளது என்பதை நடப்பு அரசியல் சூழ்நிலை ஒரு சோதனைக் களமாகும் என்றார் லிம்.

அதில் தமது சொந்தக் கூட்டணி தேர்வு பெற்று விட்டது என்றும் பிஎன் தோல்வி கண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

“எடுத்துக்காட்டுக்கு எல்லா இனங்களையும் சமயங்களையும் மாநிலங்களையும் ஒன்றுபடுத்தும் ”  ஐக்கியப்படுத்தி ஆட்சி புரியும்” ஆக்கப்பூர்வமான உருப்படியான கருப் பொருளை பக்காத்தான் ராக்யாட்டின் 13வது பொதுத் தேர்தல் கொண்டுள்ளது.”

“அதிகாரத்தைத் தங்கள் பிடியில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக அம்னோவும் பாரிசான் நேசனலும் தங்களது பாரம்பரிய ‘பிரித்து ஆளும்’ தந்திரங்களை நாடுகின்றன. அதனால் இனங்களும் சமயங்களும் ஏன் மாநிலங்களும் கூட தனித் தனியாக நிற்கின்றன,”என்றும் லிம் குறிப்பிட்டார்.

TAGS: