தீபாவளி திருநாளன்று யார் முக்கியம்: போய் ஃபிரண்டா அல்லது நஜிப்பா?

தீபாவளி ஒரு சமயத் திருநாள். இந்துக்கள் தங்களுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இருளை அகற்றி அனைவரும் நல்வாழ்வு வாழ தீப ஒளி ஏற்றும் நாள். அதனை முறையாக, நெறி தவறாமல் செய்வதற்கு மரபுகளையும் வழிமுறைகளையும் வகுத்து பின்பற்றி வருகின்றனர்.

தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எழுந்து முறைப்படி குளித்த பின்னர் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்துவதும், அதன் பின்னர் வீடு திரும்பி பெரியோரிடமிருந்து பெறும் புத்தாடைகளை அணிந்து காலை உணவு உண்பது, விருந்தினர்களை உபசரிப்பது போன்ற மரபுகள் அன்றைய தினத்தில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்வோடு பின்பற்றி வந்துள்ளனர். இன்றும் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால், குடும்பத்தை மையமாகக் கொண்ட தீபாவளி திருநாள், உள்ளத்தில் உறைந்துள்ள இருளை அகற்றி வாழ்வை ஒளிமயமாக்கும் நோக்கத்தைக் கொண்ட தீபாவளி திருநாள், சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள், இலாப நோக்கம் கொண்ட வணிகர்கள், ஏழைகளின் ஏக்கம் மீது அக்கறையற்ற குறுக்குவழியாளர்கள் போன்ற பலர் தீபாவளி திருநாளின் ஆழ்ந்த தத்துவத்தையும் மரபுகளையும் வேரறுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்கள் பலரின் இது போன்ற செயல்பாடுகள் இதர சமயத்தினரில் சிலர் இந்துக்களின் சமய நெறிகளை தங்களுக்கு வேண்டியவாறு இந்து சமய மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் விட்டுக்கொடுக்க வைக்கின்றனர்.

தீபாவளி திருநாள் டப்பாங்குத்து தரத்திற்கு தள்ளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை இப்போது காண முடிகிறது.

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் தேதி தீபாவளி திருநாளன்று மஇகாவின் ஏற்பாட்டில் பத்துமலையில் காலை மணி 9.00 லிருந்து நடைபெறவிருக்கும் தீபாவளி திருநாள் திறந்தவெளி உபசரிப்பு இதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

தீபாவளி திருநாளன்று யார் முக்கியம்? காதலன் முக்கியமா அல்லது பிரதமர் நஜிப் முக்கியமா என்ற கேள்வி எழும்பியதற்கு கடந்த ஆண்டு மலேசிய இந்து சங்கம் தீபாவளி தினத்தன்று  கோலாலம்பூர் செராசில் காலை மணி 9.00 லிருந்து நடத்திய தீபாவளி உபசரிப்பாகும். அந்த உபசரிப்பில் பிரதமர் கலந்துகொள்வதால் அதிகமான இந்தியர்கள் கலந்துகொள்வதற்கு வசதியாக காலை மணி 9.00 க்கு உபசரிப்பு தொடங்கியது. பிரதமர் நஜிப் மணி 11.00 அளவில்தான் வந்து சேர்ந்தார். நஜிப்பிற்காக இந்து சமயத்தினர் தாங்கள் பின்பற்ற வேண்டிய மரபு நெறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அதிகாலையிலேயே வீட்டை விட்டு செராசை நோக்கி கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த நஜிப்பிற்கான உபசரிப்பில் கலந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஒருவர் தமது குடும்பத்தினரிடம் – மனைவி, ஒரு மகள், இரு மகன்கள் – காலை மணி 6.00 க்கு வீட்டை விட்டு கிளம்பி செராஸ் செல்வதற்கு உபசரிப்பு நாளான தீபாவளி தினத்தன்று தயாராக இருக்க வேண்டும் என்று இரண்டொரு தினங்களுக்கு முன்பிருந்தே கூறியிருக்கிறார்.

கல்லூரி மாணவியான அவருடைய மகளுக்கு இது ஏற்புடையதாக இல்லை. போக வேண்டாம் என்று கூறினால் தகப்பனார் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, இதற்கு ஓர் அதிரடி வைத்தியம் செய்ய செய்ய முடிவெடுத்தார்.

தீபாவளிக்கு முந்திய நாள் அம்மாணவி தமது தந்தையிடம் செராஸ் தீபாவளி உபசரிப்புக்கு தம்மால் வரமுடியாது என்று கூறினார்.

ஏன் என்ற தமது தந்தையின் கேள்விக்கு பதில் அளித்த அம்மாணவி “நான் என்னுடைய போய் ஃபிரண்டை பார்க்க காலை மணி 5.00 காஜாங்கிற்கு போகிறேன்”, என்று கூறினார்.

இதனைக் கேட்ட அவரின் தந்தை அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்தார்.

ஆத்திரமடைந்த அவரது தாயார் கத்திக்கொண்டே அடிப்பதற்காக கையை உயர்த்திக்கொண்டு ஓடிவந்து “உனக்கு என்ன தைரியம். உன் அப்பாக்கிட்டே இப்படி பேசுவே. தீபாவளி நாளுன்னு பாக்காமல், காலையில் செய்ய வேண்டியதை எல்லாம் செய்யாமல் எவனையோ பார்க்கப் போறேன்னு சொல்றே”, என்று கத்தினார்.

தயாரின் கையைப் பிடித்துக்கொண்ட அம்மாணவி, “அம்மா, அதைத்தான் நானும் சொல்றேன். தீபாவளி நாளில் காலையில் செய்ய வேண்டியதை எல்லாம் செய்யாமல், நஜிப்பை பார்க்க 6 மணிக்கெல்லாம் கிளம்பனும் என்றால் என்ன அர்த்தம்? பாட்டிக்கு படையல் செய்யாமல் நஜிப்பை பார்க்க போகனும் என்றால் என்ன அர்த்தம்? இத்தனை வருஷமா பாட்டி சொல்லிக் கொடுத்தை எல்லாம் மறந்து விட்டு நஜிப்பை பார்க்க போகனும் என்றால் என்ன அர்த்தம்?”, என்று கேட்க தாயாரின் வேகம் அடங்கியது.

அதன் பின்னர் தனது அறைக்குள் சென்றுவிட்ட அம்மாணவி காலை மணி ஐந்தரை அளவில் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார். அங்கே, தாயார் ஒரு கிண்ணத்தில் எண்ணெய்யோடு தகப்பனாருடன் நின்று கொண்டிருந்தார்.

“அம்மா, என்னை மன்னிச்சிடும்மா. இன்னைக்கு காலையில் செய்ய வேண்டியதெல்லாம் செய்யாமல் போகாதே, அம்மா”, என்று கெஞ்சும் குரலில் தகப்பனார் கூறுவதைக் கேட்ட அம்மாணவி “அப்பா, நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். உங்களுடைய போக்கை மாற்றுவதற்காத்தான் அப்படி கூறினேன்”, என்றார்.

அத்துடன் அம்மாணவியின் நாடகம் முடிவுற்றது. அன்றைய தீபாவளி முந்திய ஆண்டுகளைப்போல் முறையாக நடந்தது. இது கற்பனை அல்ல. பெட்டாலிங் ஜெயாவில் நடந்த சம்பவம்.

இச்சம்பவத்தை மிகச் சுறுக்கமாக மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷாணிடம் கூறி இந்து சங்கம் தீபாவளி நாளன்று நஜிப்புக்கு உபசரிப்பு நடத்துவது முறையா என்று கடந்த ஆண்டு வினவப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “எனக்குப் புரிகிறது” என்றார். அவர் குரலில் வருத்தம் ஒலித்தது. பிரதமர் இலாகா மிகவும் வற்புறுத்தியதால் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று என்று அவர் மேலும் கூறினார்.

மேற்கூறப்பட்ட தகவல் செம்பருத்தியில்  கடந்த ஆண்டிலேயே வெளியிடப்பட்டது.

நஜிப்புக்கு காவடி

நடப்பு ஆண்டில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நவம்பர் 13 இல் மஇகா தலைவர் ஜி. பழனிவேல் பத்துமலையில் காலை மணி 9.00 லிருந்து இவ்வாண்டுக்கான தீபாவளி திறந்தவெளி உபசரிப்பை நடத்துகிறார். நஜிப்பும் பங்கேற்கிறார். 15,000 மக்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 15,000 பேரும் தீபாவளி பாரம்பரியம், மரபு, நெறிமுறைகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு தங்களுடைய இடத்திலிருந்து பத்துமலைக்கு நஜிப்புக்கு காவடி எடுக்க வரவேண்டியிருக்கிறது!

இந்த உபசரிப்பின் நோக்கம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனைத் தற்காத்துப் பேசிய மஇகா தலைவர் “அந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு … இந்திய சமூகத்தினர் மட்டுமின்றி சுற்றுப்பயணிகள் உட்பட வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சார்ந்த மக்களும் அதில் கலந்து கொள்வர்,” என்றார்.

இந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் அழைத்து தீபாவளி திருநாள் உபசரிப்பு நடத்தலாம். அதில் தவறில்லை. அது வரவேற்கப்பட வேண்டிய செயலாகும். மலேசிய சுற்றுலாத்துறைக்கு பெரும் வருமானம் கிடைக்கும்.

ஆனால் கேள்வி: நஜிப் கலந்துகொள்ளும் தீபாவளி உபசரிப்பை தீபாவளி திருநாளைக் கொண்டாடுவதற்கான நெறிமுறைகளையும் மரபுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீபாவளி நாள் காலையிலேயே தொடங்குவதற்கான கட்டாயம் என்ன?

தவறு, தவறு, தவறு

தீபாவளி திருநாளன்றே அதுவும் காலையிலிருந்தே பத்துமலையில் தீபாவளி திறந்தவெளி உபசரிப்பு நடத்த ஏற்பாடு செய்திருப்பது தவறு என்பது மலேசிய இந்து சங்கத்தின் சில முக்கிய உறுப்பினர்களின் பொதுவான கருத்தாக  இருக்கிறது.

தீபாவளி திருநாளைக் கொண்டாடும் இந்து சமயத்தினருக்கு காலையில் நிறைவேற்ற கடமைகள் உண்டு. ஆகவே, ஏற்பாட்டாளர்கள் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மிகச் சுறுக்கமாக தமது கருத்தைத் தொடர்பு கொண்ட போது மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷாண் தெரிவித்தார்.

சமயத் திருநாள்கள் கொண்டாடப்படுவதில் நாள், நேரம் மிகவும் முக்கியனானதாகும். பிறை பார்த்து உறுதிப்படுத்தும் வரையில் ரமதான் திருநாள் கொண்டாட்டம் தொடங்காது. அவ்வாறே இந்து சமய திருநாள்களுக்குச் சரியான நேரம், நட்சத்திரம் போன்றவற்றை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். இதை நாம் எக்காரணத்திற்காகவும் யாருக்காகவும் தள்ளி வைக்கக்கூடாது என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் பாலதர்மலிங்கம் கூறினார்.

தீபாவளி திருநாளின் நெறிமுறை மற்றும் மரபுப்படி குடும்பத்தினர் முதலில் ஆலயம் சென்று வழிபாட்டினை முடித்துக்கொண்ட பிறகு வீட்டிற்கு வந்து பெரியோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற பின்னர்தான் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்றாரவர்.

பிரதமர் வருகிறார் என்பதற்காக சமய நெறிகளுக்கு, மரபுகளுக்கு முரணாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் நிச்சயமாக நமது சமயத்திற்கு மதிப்பு அளிக்காதவர்கள் என்றே கருத வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, அவர்கள், யாராக இருந்தாலும் சரி, குறிப்பாக இந்தியர்களின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் மஇகாவாக இருந்தாலும் சரி, இவ்விவகாரங்களில் புரியும் தவறு, தவறுதான் என்பதை வலியுறுத்திய டாக்டர் பாலதர்மலிங்கம் இவ்வாறான தவறுகள் பொது நிகழ்ச்சிகளில் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நாம் மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய சமயத் திருநாள் நெறி கடப்பாடுகளில் மிகுந்த கண்டிப்புடன் இருக்கையில், இந்து சமய திருநாள்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்குகள் என்று பாலா வினவினார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்து சங்கம் அதன் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமய நெறி மறந்தால், சமுதாயம் நெறியற்று போய்விடும் என்பதை நாம் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாரவர்.

பெருநாள் கொண்டாடிட தேவை ஆண்டவன் தரிசனமா அல்லது அரசாள்பவன் கரிசணமா என்று அவர் கேட்டார்.

தீபாவளி திருநாளன்று இந்து சமயத்தினரின் உள்ளத்தில் இருக்க வேண்டியது ஆண்டவன், குடும்பம், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள். திருநாள் குடும்பத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் வே. கந்தசாமி கூறினார்.

தீபாவளி தினத்தன்று அதிகாலையில் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியது நமது முதல் கடமையாகும். அதில் ஆலயம் செல்ல வேண்டியது தலையாய கடமையாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

தீபாவளி காலத்தில் வேறு காரணங்களுக்காக உபசரிப்புச் செய்ய விரும்பினால் அதனை அடுத்த நாளில் செய்யலாம் என்று கூறிய கந்தசாமி, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உபசரிப்பின் நோக்கம் அரசியல் என்பது அனைவரும் அறிந்ததே என்றார்.

TAGS: