புதிய தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகளை அறிவிக்கச் செய்வது பற்றி அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
“அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அவர்களின் சொத்துகளை அறிவிக்கும் பாரங்களைப் பூர்த்திசெய்து பிரதமர்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அப்படியே செய்துள்ளனர்.”, என்றாரவர்.
“ஆனால், புதிய வேட்பாளர்களும் அவ்வாறே செய்ய வேண்டுமா என்பது பற்றி எனக்குத் தெரிந்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. இதில் என்ன பிரச்னை என்றால் எங்கள் வேட்பாளர் பட்டியல் மிக நீளமானது அத்துடன் அது இன்னமும் இறுதிசெய்யப்படவுமில்லை”.
அஹ்மட் இன்று காலை ஜாலான் டூட்டா பேருந்து முனையத்தில் நடைப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாஸ் சிலாங்கூரும் பாகாங்கும் அறிவித்துள்ளதுபோல் அம்னோவும் செய்யுமா என்று வினவியதற்கு பிரதமர்துறை துணை அமைச்சருமான அஹ்மாட் இவ்வாறு கூறினார்.
அமைச்சர்களையும் ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் பொறுத்தவரை பதவி ஏற்கும்போதும் அதன் பின்னர் ஈராண்டுகளுக்கு ஒரு முறையும் சொத்துகள் பற்றிய விவரங்களை அறிவித்தாக வேண்டும் என்பது விதியாகும் என்றவர் விளக்கினார்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு, “ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், உறுதியாக தெரியவில்லை. அமைச்சர்களும் என்னைப் போன்ற துணை அமைச்சர்களும் ஏற்கனவே அதைச் செய்து விட்டோம்”, என்றார்.