பிரான்ஸ் செம்பனை எண்ணெய் மீதான வரியை நான்கு மடங்கு உயர்த்த எண்ணுகின்றது

பிரஞ்சு மேலவை செம்பனை எண்ணெய் மீதான வரியை நான்கு மடங்கு உயர்த்துவதற்கு வகை செய்யும் நட்டெல்லா திருத்தம் என அழைக்கப்படும் சட்டத் திருத்தத்தை அங்கீகரித்துள்ளது.

அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்த அந்த எண்ணெய் பயனீட்டைக் குறைப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டது.

சொக்கலட் பொருட்களில் செம்பனை எண்ணெய் முக்கியமான கலவையாகும்.

தற்போது செம்பனை எண்ணெய்க்கு விதிக்கப்படும் யூரோ 100 (390 ரிங்கிட்) வரியை 400 யூரோவாக ( 1,560 ரிங்கிட்) அதிகரிப்பதற்கு வகை செய்யும் அந்தத் திருத்தத்தை மேலவை 212க்கு 133 வாக்குகளில் ஏற்றுக் கொண்டது.

செம்பனை எண்ணெய்யை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளான மலேசியாவும் ஐவரி கோஸ்ட்டும்  ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தத் திருத்தம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

“கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்த செம்பனை எண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது,” என சோஷலிசக் கட்சி உறுப்பினர் Yves Daudigny கூறினார்.

அந்த எண்ணெய்க்கு எதிரான நடவடிக்கை ஆதாரமற்றது, பொறுப்பற்றது எனக் கூறிய உலகில் இரண்டாவது பெரிய செம்பனை எண்ணெய் உற்பத்தி நாடான மலேசியா, இறைச்சி, வெண்ணெய் போன்ற பொருட்கள் வழி பிரஞ்சுக்காரர்கள் அதிகமான கொழுப்புச் சத்துக்களைப் பெறுவதாகத் தெரிவித்தது.

இதனிடையே நட்டெல்லா சாக்கெலட்டுக்களை தயாரிக்கும் பெரெரோ நிறுவனத்துக்கு அந்த வரி ஒரு கிலோ கிராம் நட்டெல்லாவைத் தயாரிக்கும் செலவை 6 காசு அதிகரிக்கும் என தொழில் துறை நிபுணர்கள் கூறினர். அது சில்லறை விலையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகும்.

செம்பனை எண்ணெயை நட்டெல்லா-வைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்துவதை தான் மாற்றப் போவதில்லை என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கேக்குகள், குக்கிஸ், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களிலும் செம்பனை எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.

அந்தத் திருத்தம் மீது வாக்களிப்பதற்கு மேலவை உறுப்பினர்களுக்கு இன்னொரு வாய்ப்பும் உண்டு.

அந்தத் திருத்தத்தை கீழவை என அழைக்கப்படும் தேசியச் சட்டமன்றமும் பரிசீலிக்க வேண்டும்.

ஏஎப்பி