அம்னோ சேவை மையத்தில் சாயம் வீசியடிக்கப்பட்டது

புக்கிட் அந்தாராபங்சாவில் உள்ள அம்னோ சேவை மையம்,காலிகளின் அட்டகாச செயல்களுக்கு இலக்காகியுள்ளது. அதன்மீது கறுப்பு, கிவப்புச் சாயங்கள் வீசுயடிக்கப்பட்டிருந்தன.

இரண்டு பிளாஸ்டிக் பைகள்-ஒன்றில் சிவப்புச் சாயம் மற்றதில் கறுப்புச் சாயம்- அம்மையத்தின்மீது வீசியெறியப்பட்டதாக அம்னோ புக்கிட் அந்தாராபங்சா இடைக்கால நிர்வாகச் செயலாளர் ஹம்டான் முகம்மட் சாலே கூறினார். அச்சம்பவம் புதன்கிழமை இரவு நிகழ்ந்திருக்கலாம் எனறவர் நம்புகிறார்.

மறுநாள் காலை சுமார் 11மணிக்குத்தான் அது தெரியவந்தது.  தொகுதித் துணைத் தலைவர், அவர்தான் சேவை மையத்தின் கண்காணிப்பாளர், அவர்தான் முதலில் அதைப் பார்த்தார்.

“அது பற்றி இன்றுகாலை ஹுலு கிளாங் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார்”, என்றவர் சொன்னார்.

பிஎன் சின்னம் கொண்ட ஒரு பதாகை,. சேவை மையத்தின் முன்வாசல் கதவு, சுற்றுசுவர், மையத்தின்முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்னோ, பிஎன் கொடிகள் ஆகியவற்றின்மீது சாயம் வீசியடிக்கப்பட்டிருந்ததாக ஹம்டான் கூறினார்.

“இப்படி நடந்தது இதுவே முதல் முறை”, என்றவர் சொன்னார். சாயம் வீசியடிக்கப்பட்டதைத் தவிர்த்து பலவந்தமாக உள்ளே நுழையும் முயற்சிகள் நடந்ததாக தெரியவில்லை மையத்துக்கு வேறு சேதங்களும் இல்லை.

தொடர்ச்சியான அரசியல் வன்செயல்கள்

13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வன்செயல்களும் அதிகரித்து வருகின்றன.

பிஎன், பக்காத்தான் ரக்யாட் இரண்டுமே தங்கள் இடங்களும் வாகனங்களும் காலித்தனத்துக்கு இலக்கானதாக முறையிட்டுள்ளன. பெரும்பாலும் சாயங்கள் வீசியடிக்கப்படுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

சில நேரங்களில் இந்தக் காலித்தனம் மோசமான வடிவெடுக்கிறது. பிப்ரவரி மாதம் ஜோகூர் பாஸ் துணை ஆணையர் சுல்கிப்ளி அஹ்மட்டின் வீட்டின் முன்புறம் தீ பற்றிக்கொண்டது. அவரது வீட்டுக்கு யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்கிறார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகளுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. கடந்த ஆண்டு தைப்பிங் எம்பி இங்கா கொர் மிங், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் ஒன் ஆகியோருக்கு துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சலில் அனுப்பப்பட்டிருந்தன.

TAGS: