வாக்களியுங்கள் ( Undilah ) வீடியோ தடை செய்யப்பட்டதை கைரி எதிர்க்கிறார்

தொலைக்காட்சியில் வாக்களியுங்கள் ( Undilah ) வீடியோ ஒளியேறுவதை அனுமதிப்பதில்லை என எம்சிஎம்சி என்ற மலேசியப் பல்லூடக தொடர்பு ஆணையம் எடுத்துள்ள முடிவு ஆளும் கூட்டணிக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஒப்புக் கொண்டுள்ளார்.

“அந்த வீடியோ தொடர்பில் எம்சிஎம்சி எடுத்துள்ள குழப்பமான நடவடிக்கை எங்களுக்கு அதிகமான சேதத்தை ஏற்படுத்தும். நாம் அந்த வீடியோவை அனுமதிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.”

“சமுதாயத்தின் சில தரப்புக்களை காயப்படுத்துவதால்” அந்த வீடியோ அங்கீகரிக்கப்படவில்லை என தகவல், பண்பாடு தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்வி ஒன்றுக்கு கைரி பதில் அளித்தார்.

அமைச்சரது அறிக்கை குறித்து அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் எம்சிஎம்சி-யின் நடவடிக்கை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்ட தகவலுக்கு முரணாக இருப்பதாக சொன்னார்.

“இது தேவையற்றது. தடை ஏதும் இல்லை என நேற்று அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் பிரதமர் கூறியுள்ளார். ஆகவே நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது.”

அதே கருத்தை மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங்கும் பிரதிபலித்தார். இசைக் கலைஞரான பீட் தியோ தயாரித்த அந்த வீடியோவைத் தடை செய்வது “தேவையில்லாத நடவடிக்கை,” என்றார் அவர்.

“நான் எந்தப் பிரசனையையும் காணவில்லை. என் மத்தியக் குழு உறுப்பினர்களும் அது நன்றாக இருப்பதாகக் கருதுகின்றனர். எம்சிஎம்சி தணிக்கை செய்வதற்கு அதில் ஒன்றுமில்லை என நான் எண்ணுகிறேன்.”

வீடியோவில் “மறைவான செய்திகள்” அடங்கியுள்ளன

கல்வித் துணை அமைச்சரும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளவருமான வீ, பொறுப்பில் இருப்பவர்கள் “அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது” என்றார்.

“அந்த வீடியோவில் உள்ள நடிகர்களில் ஒருவரான நான் பாடியதைத் தவிர ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.”

“வாக்களிக்குமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதும் வலியுறுத்துவதும் அதன் நோக்கமாகும். அது சாதாரண செய்தி. இளைய தலைமுறையினரை கணிப்பதற்கு 1950ம் ஆண்டுகளின் சிந்தனையைப் பயன்படுத்த வேண்டாம்.”