பாலியல் வல்லுறவு விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் பதவி விலக மாட்டார்

பினாங்கில் மூன்று போலீஸார்  பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.

“அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டோம். இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்? இதுதானே நம் நாட்டின் நடைமுறை”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

அவ்விவகாரத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கூறப்படுவது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு ஹிஷாமுடின் இவ்வாறு பதிலிறுத்தார்.

போலீஸ் ஒழுங்கீனம் மீதான சுயேச்சை புகார் ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்க பரிந்துரைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட போதும் அது அமைக்கப்படாதிருப்பதைச் சுட்டிக்காட்டி அதை அமைப்பதற்கு இது பொருத்தமான தருணம் என்று கூறப்படுவது பற்றியும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்காது மழுப்பினார்.

“ஐபிசிஎம்சி? ஒரே ஒரு சூத்திரத்தை வைத்து நம் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது.

“முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், தவறு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும் எனபதற்காக அவர்களை அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறோம். அந்த வகையில் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறோம்”, என்றார்.

அப்படியானால், ஐபிசிஎம்சி தேவையில்லை என்பதுதான் அவரின் எண்ணமா என்று வினவியதற்கு, மீண்டும் நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

அதற்குப் பதிலாக, அந்தப் பாலியல் வல்லுறவு வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதுபோன்ற விவகாரத்தை மூடிமறைக்காமல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்று போலீஸ் அதிகாரிகள் மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உணவகப் பணியாளரான இந்தோனேசிய பெண்ணொருவரை  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.