பக்காத்தான் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்க பாஸ் தயாராக இருப்பதாக 58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.
மலேசியர்களுக்கு 13வது பொதுத் தேர்தல் திருப்பு முனையாகும். புத்ராஜெயாவுக்கு புதிய பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை தெரிவு செய்வதின் மூலம் நாடு புதிய தொடக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டுமா அல்லது அம்னோ/பிஎன் -னின் அதிகார அத்துமீறல், அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து மக்களுடைய எதிர்காலம், நம்பிக்கை, அவா ஆகியவை அழிக்கப்படுவதைக் காண வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவுக்கான போர்க்களத்தில் பக்காத்தான் ராக்யாட் அம்னோ/பிஎன் -னைத் தோற்கடிக்க வேண்டுமானால் இரண்டு முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அம்னோ/பிஎன் கூட்டணிக்கும் பாஸ், பிகேஆர், டிஏபி ஆகியவற்றைக் கொண்ட பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கும் இடையில் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருப்பதை பக்காத்தான் மக்களுக்கு காட்ட வேண்டும். புரிய வைக்க வேண்டும்
முதலாவதாக பக்காத்தான் ராக்யாட் ‘ஒன்றுபட்டு ஆளும்’ அரசியல் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. அது மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் இன சமய ரீதியில் வேறுபட்டு நிற்பதற்கு வழி வகுத்து விட்ட அம்னோ/பிஎன் ஆட்சியின் பாரம்பரிய, பிரித்து ஆளும் அரசியலிலிருந்து மாறுபட்டது.
அம்னோ/பிஎன் பொய்கள், ஜோடனைகள், அச்சமூட்டுதல் ஆகியவற்றைக் கொண்ட அரசியல் வழி அம்னோ/பிஎன் வெவ்வேறு இன சமய மக்களிடையே முரண்பாடான, வெவ்வேறான செய்திகளைப் பரப்பி மலேசிய நாட்டை நிர்மாணிக்கும் பணிக்குப் பதில் சந்தேகம், அவநம்பிக்கை, ஏன் வெறுப்பு விதைகளைக் கூடத் தூவி வருகிறது.
அம்னோ மலாய்க்காரர்களிடையே பரப்பும் பொய்யான ஜோடனையான செய்தி இது தான்: “13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் புத்ராஜெயாவில் டிஏபி உண்மையான ‘அதிகாரமாக’ இருக்கும். மலாய் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டு மலாய்க்காரர்கள் “சொந்த நிலத்தில் பிச்சைக்காரர்களாகி விடுவர், இஸ்லாம் ஒரங்கட்டப்பட்டு இந்த நாடு கிறிஸ்துவ மலேசியாவாகி விடும், மலாய் ஆட்சியாளர்கள் முறை அகற்றப்பட்டு மலேசியா குடியரசாகி விடும்.”
அதனை வேறு வகையாகச் சொன்னால் டிஏபி பக்காத்தான் பொதுக் கொள்கை வடிவத்திலும் புக்கு ஜிங்காவிலும் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை கைவிடும், துரோகம் செய்யும் என்பதாகும்.
சீனர்களிடையே பொய்யான ஜோடனையான பின் வரும் செய்திகளைப் பரப்புவதற்கு மசீச-வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திகள் வருமாறு: “பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் பாஸ் கட்சியே ‘உண்மையான’ அதிகாரமாக இருக்கும், அதனால் மலாய்க்காரர் அல்லாதார், முஸ்லிம் அல்லாதார் ஆகியோருடைய அரசியல், பொருளாதார, கல்வி, சமூக, பண்பாட்டு, சமய உரிமைகள் அனைத்தும் தியாகம் செய்யப்படும்.’
அந்தப் பொய்கள், ஜோடனைகளுக்கு பின்னணியில் உள்ள செய்தி இது தான்: பாஸ் கட்சி பக்காத்தான் பொதுக் கொள்கை வடிவத்திலும் புக்கு ஜிங்காவிலும் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை கைவிடும், துரோகம் செய்யும்.
இத்தகைய அரசியல் மிகவும் பொறுப்பற்றது, ஈவிரக்கமற்றது, மலேசிய நாட்டு நிர்மாணிப்புக்கு ‘பிரித்து ஆளும்’ தந்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தீங்கை முற்றிலும் உணராதது.
பக்காத்தான் அதற்கு நேர்மாறாக நாட்டில் நீதி, சுதந்திரம், ஜனநாயகம், நல்ல ஆளுமை ஆகியவற்றை மீண்டும் நிலை நிறுத்தும் பொதுவான இலட்சியத்துடன் இன, சமய அல்லது வட்டார வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க பாடுபடுகின்றது.
பாரிசான் நேசனல் அம்னோ ஆதிக்கத்தில் இருப்பதுடன் ஒப்பிடும் போது பக்காத்தான் இணக்க அடிப்படையில் இயங்கும் சம நிலையான பங்காளிகளைக் கொண்ட கூட்டணியாகும். பக்காத்தானில் எந்த ஒரு தனிக்கட்சியும் ஆதிக்கம் செலுத்தவில்லை.
இரண்டாவதாக அம்னோ/பிஎன் -னுடன் உள்ள இன்னொரு முக்கிய வேறுபாட்டையும் நாம் மலேசியர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உண்மையான, கௌரவமான, நம்பிக்கையான அரசியலை பக்காத்தான் கூட்டணி பின்பற்றுகிறது என்பதே அந்த வேறுபாடு ஆகும்.அங்கு நமது வார்த்தைகளே நமது உத்தரவாதமாகும். பாஸ், பிகேஆர் அல்லது டிஏபி ஆகிய மூன்று பக்காத்தான் தோழமைக் கட்சிகள் பக்காத்தானில் அது பொதுக் கொள்கை வடிவத்தில் இருந்தாலும் சரி, புக்கு ஜிங்காவில் இருந்தாலும் சரி அவற்றில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை கைவிட மாட்டா அல்லது துரோகம் செய்ய மாட்டா.
13வது பொதுத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டத்துக்கு தங்களது முழு ஆதரவை வழங்குமாறு நான் அனைத்து பக்காத்தான் தலைவர்களையும் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அம்னோ/பிஎன் ஆட்சியில் மலிந்து விட்ட ஊழல், அதிகார அத்துமீறல், அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு அது தான் ஒரே ஒரு வழி.
—————————————————————————————————————————————————
லிம் கிட் சியாங் ஈப்போ தீமோர் எம்பி ஆவார்