அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் முதுநிலை நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் அதிகமான சம்பளம், போனஸ் குறித்து பாஸ் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் பாஸ் தாக்க விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாபோங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மி இஸ்மாயில் அனுபவிக்கும் ஊதிய அனுகூலங்கள் பற்றி பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமாரும் பாஸ் கோலா சிலாங்கூர் உறுப்பினர் சுல்கெப்லி அகமட்டும் கேள்வி எழுப்பியதை பிஎன் பாசிர் கூடாங் உறுப்பினர் முகமட் அஜிஸ் கடுமையாகச் சாடினார்.
“இஸ்மி மலாய்க்காரர், முஸ்லிம். பாஸ் அவர் முஸ்லிம் என்பதால் அவரைக் குறி வைக்கிறது. தாபோங் ஹாஜியின் நல்ல பணிகள் காரணமாக மலேசியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடிகிறது. அதற்காக இறைவனுக்கும் தாபோங் ஹாஜிக்கும் நன்றி கூற வேண்டும்.”
“நீங்கள் தொடர்ந்து முஸ்லிம்களை தாக்கி வருகின்றீர்கள். நீங்கள் துவா சொல்வதில் கூட மோசமான விஷயங்களைக் கேட்கின்றீர்கள். அவர்கள் ஏன் வெற்றி பெற்ற முஸ்லிம்களை தாக்க வேண்டும் ?”
“இது தான் பாஸ் செய்யும் வேலையா ? நல்லதை எடுத்துக் கொள்வோம். நாம் அனைவரும் முஸ்லிம்கள்,” என முகமட் சொன்னார். அவர் மனித வள அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு மீது குழு நிலையில் நடந்த விவாதத்தில் பேசினார்.
அந்த தாபோங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரி தோட்டங்கள் முதல் ஹஜ் யாத்திரை வரை பல வகையான துணை நிறுவனங்களை கண்காணிப்பதால் அவருக்கு அந்த ஊதியமும் சலுகைகளும் நியாயமானவை என அவர் மேலும் சொன்னார்.
மற்ற ஜிஎல்சி தலைமை நிர்வாக அதிகாரிகளுடைய ஊதியங்கள் குறித்து பாஸ் கேள்வி எழுப்பவில்லை என அவர் வினவினார்.
வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்ட போது நடைபெற்ற விவாதத்தில் இஸ்மி-க்கு மாதம் ஒன்றுக்கு 85,000 ரிங்கிட் சம்பளம் வழங்கப்படுவதாக சுல்கெப்லி தெரிவித்தார்.