பக்காத்தான் ராக்யாட்டின் எதிர்காலப் பிரதமர் குறித்த பிரச்னை தொடர்பில் சில நாட்களாக பிஎன் ஆதரவு ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்த பின்னர் அந்த வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த விஷயம் மீது கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்துக்களுக்கு அந்த ஊடகங்கள் தவறாக விளக்கம் கொடுத்து விட்டன என்று அது கூறியது.
அடுத்த பக்காத்தான் பிரதமராக அப்துல் ஹாடியை அங்கீகரிப்பது என்பது கட்சியின் அதிகாரத்துவ நிலை இல்லை என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.
பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் யார் பிரதமராக இருப்பார் என்ற கேள்வியை ஒரு வாக்குவாதமாக பக்காத்தான் தலைவர்களும் ஆதரவாளர்களும் மாற்றி விடக் கூடாது என முஸ்தாபா கேட்டுக் கொள்ளும் அறிக்கையை பாஸ் கட்சி ஏடான ஹாராக்கா டெய்லி நேற்று வெளியிட்டது.
அந்த விவகாரம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் விவாதத்தின் போது மட்டுமே எழுப்பப்பட்டது. கூட்ட இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் அது இடம் பெறவில்லை என்று முஸ்தாபா சொன்னார்.
“ஆகவே அந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அது கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானமும் அல்ல.’
அடுத்த தேர்தலில் பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் பாஸ் அதிகமான இடங்களை வெல்லுமானால் அப்துல் ஹாடி பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சில பேராளர்கள் தெரிவித்த யோசனை மீது பிஎன் ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு முஸ்தாபா பதில் அளித்தார்.
முக்கிய நாளேடுகள் குறிப்பாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா, அந்த விஷயத்தை பெரிதுபடுத்தி அந்த யோசனையை ஆதரிக்கும் பாஸ் இரண்டாம் நிலைத் தலைவர்களையும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராக வேண்டும் என விரும்பும் டிஏபி தலைவர்களையும் பேட்டி கண்டு வருகின்றது.
பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையிலான தகராறு பக்காத்தானுடைய அதிகாரப் பேராசையைக் காட்டுவதாக பிஎன் தலைவர்கள் சொன்னதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாடி பிரதமராக வேண்டும் என கட்சியின் உலாமா, மகளிர் பிரிவுகள் தெரிவித்த யோசனை, தலைவர் மீது கீழ் நிலை உறுப்பினர்கள் வைத்துள்ள மரியாதையைக் காட்டுவதாகவும் முஸ்தாபா சொன்னார்.