சின் பெங் நோய்வாய்ப்படவில்லை என்கிறார் வழக்குரைஞர்

சின் பெங் நோய்வாய்ப்பட்டு சுய நினைவு இழந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்த முன்னாள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைச் செயலாளரைப் பிரதிநிதித்த வழக்குரைஞரான சான் கோக் கியோங் கூறுகிறார்.

ஒங் பூன் ஹுவா என்ற இயற்பெயரைக் கொண்ட சின் பெங் குறித்த வதந்திகள் உண்மையானவை அல்ல என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டது போல அவர் சுய நினைவை இழக்கவில்லை,” என்றார் அந்த வழக்குரைஞர்.

தாய்லாந்தில் சின் பெங்-கை கவனித்துக் கொள்ளும் நபருடன் தாம் தொடர்பு கொண்டதாக சான் சொன்னார்.

அவர் சின் பெங்கின் உண்மையான நிலையை எடுத்துரைத்ததாகவும் சான் தெரிவித்தார்.

தாம் சற்று முன்னர் சின் பெங்-குடன் தொலைபேசியில் பேசியதாகவும் குறிப்பிட்ட சான், “நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என சின் பெங் சொன்னார்”, எனக் கூறினார்.

“அந்த வதந்திகள் எப்படிப் பரவத் தொடங்கின என்பது எனக்குத் தெரியாது. சின் பெங், பாங்காக்கில் இருக்கிறார். செய்திகளில் வெளியானது போல அவர் நிச்சயம் மருத்துவமனையில் அல்ல.”

“அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் அல்லது அவரது குடும்பத்தாரை மருத்துவர்கள் அழைக்கின்றனர் என்பது எல்லாம் உண்மையல்ல.”

மலேசியாவுக்குத் திரும்புவதற்கு சின் பெங் நடத்திய சட்டப் போராட்டத்தில் சான் அவரைப் பிரதிநிதித்தார்.

தாம் மலேசியக் குடிமகன் என்பதை நிரூபிப்பதற்கு பத்திரப் பூர்வமான ஆதாரங்களைக் காட்டத் தவறியதால் கூட்டரசு நீதிமன்றம் சின் பெங்-கின் முயற்சியை நிராகரித்தது.

கம்யூனிச கிளர்ச்சியின் போது பேராக் சித்தியவானைச் சேர்ந்த சின் பெங் தமது பிறப்புச் சான்றிதழை இழந்து விட்டதாக அவரைப் பிரதிநிதித்த வழக்குரைஞர்கள் கூறினர்.

அந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நோரின் ஒப்புதலைக் கூட வழக்குரைஞர்கள் பெற்றிருந்தனர்.

நான்கு தசாப்தங்களுக்கு நீடித்த பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்த ஹட்யாய் உடன்பாட்டில் சின் பெங்-குடன் அப்போது போலீஸ் சிறப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ரஹிமும் கையெழுத்திட்டார்.