பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மீது விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை வெளியிடும் அளவுக்கு அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது குறித்து விவசாய அமைச்சர் நோ ஒமார் ‘அதிகம் கனவு காணக் கூடாது,” என புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி கூறுகிறார்.
பிகேஎன்எஸ் துணை நிறுவனம் ஒன்று 150 மில்லியன் ரிங்கிட் பெறும் பங்குகளை பூமிபுத்ரா அல்லாத நிறுவனம் ஒன்றுக்கு விற்பதாக நோ கூறிக் கொள்வது ஆதாரமற்றது என அஸ்மின் சொன்னார்.
பிகேஎன்எஸ் வாரிய உறுப்பினர் என்ற முறையில் சொத்துக்களை விற்பது எந்த யோசனையும் விவாதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய விவகாரம் ஏதும் என் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும் தாம் சொல்வதாக அவர் தெரிவித்தார்
“ஆகவே மந்திரி புசாராக கனவு காணும் நோ ஒமார், உண்மையான விவரங்களைத் திரிக்க முயலக் கூடாது. இது போன்ற குற்றச்சாட்டுக்களையும் சுமத்தக் கூடாது,” என அஸ்மின் இன்று மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.
Worldwide Holdings என்ற துணை நிறுவனம் தனது பங்குகளை பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களுக்கு விற்று வருவதாக அம்னோ தஞ்சோங் காராங் எம்பி-யுமான நோ தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகேஎன்எஸ் நடவடிக்கைகளை அதற்கு முழுமையாகச் சொந்தமான PKNS Real Estate Company என்ற நிறுவனத்தின் கீழ் ஒருமுகப்படுத்தும் ‘நிறுவன நடவடிக்கையாக’ அந்தப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக அஸ்மின் விளக்கினார்.
அந்த நடவடிக்கையை செப்டம்பர் 12ம் தேதி நிதி அமைச்சும் அங்கீகரித்துள்ளது.
“ஆகவே பிகேஎன்எஸ்-ஸை தாக்க வேண்டாம். நாங்கள் பூமிபுத்ரா அல்லாதாருக்கு சொத்துக்களை விற்பதாக குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் வேண்டாம்.”
“எதிர்வரும் பொதுத் தேர்தலை ஒட்டி மலேசிய மலாய் உணர்வுகளைத் தூண்டி விடுவதே அந்தக் குற்றச்சாட்டுக்களின் நோக்கம்,” என்றும் அஸ்மின் தெரிவித்தார்.