செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது

செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு பிரதமர் நஜிப் ரிம1 மில்லியன்  அளிப்பதாக உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் போது ஏப்ரல் 10, 2010 இல் வாக்குறுதி அளித்தார்.

இரண்டு ஆண்டு ஏழு மாதங்களாகியும் பிரதமர் நஜிப் அவரது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. “நம்புங்கள்” என்ற கூறிய நஜிப்பை நம்பி இவ்வளவு காலம் காத்திருந்து ஏமாற்றமடைந்த செரண்டா தமிழ்ப்பள்ளி வாரிய உறுப்பினர்கள் நேற்று நள்ளிரவு மணி 12.00க்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.

அப்பள்ளி வாரியத்தின் தலைவர் எ.இராம ராவ் தலைமையில் வாரியக்குழு உறுப்பினர்கள்  வி. அருணாசலம், என். இராமசாமி, கதிரவன், முனியப்பன், இராமையா மற்றும் மணிமாறன்  ஆகியோர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

தமிழ்ப்பள்ளிக்கான அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பிற்பகல் மணி 2.00 அளவில் முடிவுக்கு வந்தது.

பிரதமர் நஜிப், துணைப் பிரதமர் முகைதின் யாசின் மற்றும் மஇகா தலைவர் ஜி. பழனிவேல் ஆகிய மூவரும் ரிம5.5 மில்லியன் வழங்க அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையில் உண்ணாவிரத்தைத் தொடரப் போவதாக பள்ளி வாரியத் தலைவர் நவம்பர் 20 இல் கூறினார்.

வாரிய உறுப்பினர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள எடுத்திருந்த முடிவை சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக், முகைதின் யாசின், ஜி.பழனிவேல் மற்றும் கல்வி இலாகாவுக்கும் நவம்பர் 3 ஆம் தேதி தெரியப்படுத்தியதாக இராம ராவ் கூறினார்.

நவம்பர் 20க்குள் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் வாரிய உறுப்பினர்கள் நவம்பர் 21 இல் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவர் என்ற தகவலும் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனிடையில், செரண்டா தமிழ்ப்பள்ளி வாரிய உறுப்பினர்கள் நேற்று நள்ளிரவு மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்த தகவலைப் பெற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நேற்று பிற்பகல் மணி 1 அளவில் செரண்டாவுக்கு சென்று உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தவர்களைச் சந்தித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளவர்களின் உடல் நலம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களின் கவலை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டிய சேவியர், மத்திய அரசாங்கத்திற்கு “ஒரு மாதக்கால அவகாசம் கொடுப்போம். மாநில அரசு உதவத் தயாராக் இருக்கிறது. ஆகவே, உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

சேவியரின் “மாநில அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு உதவத் தயாராக இருக்கிறது” என்ற உறுதிமொழியையும், உண்ணாவிரத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்ட அவரது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு செரண்டா தமிழ்ப்பள்ளிக்காக அப்பள்ளியின் வாரிய உறுப்பினர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டை பிற்பகல் மணி 2.00 அளவில் முடித்துக்கொண்டனர்.