மலேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தேர்தல் உதவி கோரி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்த போதிலும் மலேசியத் தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா சொல்லாது, சொல்லவும் முடியாது என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் செனட்டர் பாப் கார் கூறியிருக்கிறார்.
பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த மலேசியப் பொதுத் தேர்தல், மோசடி, ஊழல் ஏதுமின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு உதவுமாறு அன்வார் கார்-க்கு கடிதம் எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தாம் வாக்காளர் பதிவுகளில் மோசடிகள் முரண்பாடுகள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்ததாகச் சொல்லப்படுகின்றது.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியதுடன் ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆனால் மலேசியத் தேர்தல்கள் மலேசிய மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என கார் குறிப்பிட்டார்.
“அந்தத் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது மீது ஆஸ்திரேலியா எதுவும் செய்ய முடியாது. அதே போன்று ஆஸ்திரேலியத் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன என மலேசியாவோ இன்னொரு அரசாங்கமோ சொல்ல முடியாது.”
“நாங்கள் மலேசியாவுக்கு தேர்தல் அதிகாரி அல்ல.”
ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதைக் காணவே ஆஸ்திரேலியாவிரும்புகிறது என கார் சொன்னார்.
மலேசியாவுக்கு அண்மையில் தாம் சென்றிருந்த போது அன்வார் தமது கவலையை நேரடியாகத் தெரிவித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்வார்: வாக்காளர் பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட குடி மக்கள்
மலேசியாவுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புமாறு அன்வார் விடுத்த வேண்டுகோளையும் கார்நிராகரித்தார். அதற்கு மலேசிய அரசாங்கம் தான் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் நாடுவோரை பரிவரித்தனை செய்து கொள்வதற்கான உடன்பாடு மீது ஆஸ்திரேலியா மலேசியாவுடன் பேச்சு நடத்துவதால் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கத்துடன் நல்ல உறவுகளைப் பராமரிக்க கான்பெரா விரும்புவதால் அது நடவடிக்கை தயங்குகிறது எனச் சொல்லப்படுவதை கார் ஒப்புக் கொள்ளவில்லை.
கடந்த புதன் கிழமை ஏபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் அன்வார், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் மோசடிகள் நிகழக் கூடும் எனத் தாம் கவலை கொள்வதாக தெரிவித்திருந்தார்.
வாக்களிக்க பலர் தகுதி பெற்றிருந்தும் அவ்வாறு செய்வதற்குப் பலர் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அத்துடன் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
முக்கிய நாளேடுகளில் எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறிக் கொண்டார்.
அன்வார் தமது கவலையை முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் -இடம் விவாதித்துள்ளதுடன் ஆஸ்திரேலிய உதவி கோரி கார்-க்கும் கடிதம் எழுதியுள்ளார். ஈராக், ஆப்கானிஸ்தான், மியன்மார் ஆகியவற்றில் சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஆனால் மலேசியா குறித்து மௌனமாக இருப்பதாகவும் அன்வார் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பெர்னாமா