பினாங்கில் டிஏபி பேராளர் கூட்டம்

அடுத்த மாதம் டிஏபி பேராளர் கூட்டம் பினாங்கில் நடைபெறுவது பார்வையாளர்களுக்கு வியப்பளிக்கலாம். அது, 13வது பொதுத் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதால் அதற்காக கட்சியை பலப்படுத்தும் ஒர் உத்தி என்றவர்கள் கருதுகின்றனர்.

இது டிஏபி கட்சித் தேர்தல்கள் நடைபெறும் ஆண்டாகும்.அந்த வகையில் புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் வகிக்கும் தலைவர் பதவிக்கும் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் தலைமைச் செயலாளர் பதவிக்கும் போட்டி எழுமா என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால், மலேசிய வரலாற்றிலியே மிகக் கடுமையான தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் கட்சிக்குள் பிரச்னைகளை உண்டுபண்ண விரும்ப மாட்டார்கள்.

எனவே, கர்பாலின் பதவிக்குப் போட்டி இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.

மேலும், கட்சிக்கே ஓர் அடையாளமாக இருப்பவர் கர்பால். டிஏபி இனவாதக் கட்சி அல்ல என்பதைக் காண்பிப்பதற்கு அங்கு இருப்பது அவசியம்.

லிம்மும் கட்சிக்கு இன்றியமையாதவர். இன்னொரு தவணைக்கு அவர் அப்பதவியில் இருக்கலாம். அந்த வகையில் லிம்முக்கும் போட்டி இருக்காது.

“டிஏபி-யில் உள்பிரச்னை கிடையாது.அதனால் தலைவர், தலைமைச் செயலாளர் போன்ற பதவிகளில் மாற்றங்கள் நிகழும்  என நினைக்கவில்லை”, என்று மாநில டிஏபி செயலாளர் இங் வை ஏய்க் கூறினார்.

103 வேட்பாளர்கள் நியமனம்

டிசம்பர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டிஏபி பேராளர் கூட்டத்தில் 2.500 பேராளர்கள் கலந்துகொள்வர். இதற்கு முந்திய கூட்டம் 2008 ஆகஸ்டில் நடைபெற்றது. அதன்பின் நடந்திருக்க வேண்டிய கூட்டம் இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

கட்சியின் மத்திய செயலவையின் 20 இடங்களுக்கு 103 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று தெரிகிறது. வேட்பு மனுக்களை மீட்டுக்கொள்வதற்கான கெடு நேற்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. போட்டியினின்றும் யாராவது விலகிக் கொண்டிருந்தால் இனிமேல்தான் அது தெரிய வரும்.

இவர்களில் 20 பேரைப் பேராளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். புதிய செயலவை மேலும் பதின்மரை நியமனம் செய்யும்.

சிலாங்கூரின் உதவித் தலைவர் டெங் சாங் கிம்(வலம்) அடிக்கடி ஏதாவது பேசி வம்பில் மாட்டிக்கொள்வது உண்டு, அவரது வாய்ப்புப் பற்றிக் கேட்டதற்கு 20பேரில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என இங் தெரிவித்தார். 

“டெங்குக்கு எப்போதும் ஆதரவு உண்டு. அவர் விடுபடாமல் பார்த்துக்கொள்வதுதான் நல்லது”, என லிம்மின் அரசியல் செயலாளருமான இங் கூறினார்.

இதன் தொடர்பில் சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் டெங்கைத் தொடர்புகொண்டு வினவியபோது, அவர் எதுவும் சொல்ல மறுத்தார். தம்மை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்க வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

டெங், தம்மால் பிரச்னை எதுவும் உருவாகாதிருக்க பெரும்பாலும் இந்தத் தடவை பேராளர் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று நம்பலாம். கடந்த முறை சிலாங்கூர் கூட்டத்திற்கு அவர் செல்லாதது சரிச்சையாக்கப் பட்டது.

40 ஆண்டுகளில் முதல் தடவையாக மகளிர் பகுதியின் ஆண்டுக்கூட்டம்

இதனிடையே, டிஏபி சோசலிஸ்ட் இளைஞர் பகுதி (டேப்சி)யும் மகளிர் பகுதியும் அவற்றின் பொறுப்பாளர்களை டிசம்பர் 9-இல் கோலாலம்புரில் தேர்ந்தெடுப்பர்.

40 ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்ட மகளிர் பகுதி முதல் முறையாக இந்த ஆண்டில்தான் அதன் ஆண்டுக்கூட்டத்தை நடத்துகிறது எனற தகவலை அதன் தலைவர் சொங் இங் சீன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

டேப்சி தேர்தல்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பகுதியின் தலைவர், துணைத் தலைவர், தலைமைச் செயலாளர் பதவிகளுக்குப் போட்டி நிலவுகிறது.

தலைவர் பதவிக்கு தியோ கொக் சியோங் (பாகாவ்), வொங் கா வோ (கேனிங்), ஜெனிஸ் லீ (தெராதாய்) ஆகியோர் போட்டியிடுவர் என்று தெரிகிறது.

“தியோவின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் தெற்கத்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வொங்-குக்கு வடக்கத்தி மாநிலங்களில் ஆதரவு அதிகம். ஜெனிஸுக்கு மகளிர் ஆதரவு இருக்கும்.

“ஜெனிஸ் (இடம்) முன்கூட்டியே ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டார். அவரைக் குறைத்து மதிப்பிடக் கூடாதுதான். ஆனால், அண்மையில்தான் மாநில இளைஞர் பகுதியில் அவர் போட்டியிட்டுத் தோற்றார் என்பதால் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்”, என்றார்.

பேராளர் கூட்டத்தை பினாங்கில் நடத்துவது வழக்கத்துக்கு மாறானதல்ல என்றும் இங் குறிப்பிட்டார். மத்திய செயலவை ஆண்டில் நடுப்பகுதியிலேயே பேராளர் கூட்டத்தை பினாங்கில் நடத்துவதென தீர்மானித்து விட்டது.

“எதிர்வரும் தேர்தலில் பினாங்கில் தோல்வியுறலாம் என்று லிம் எச்சரித்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை.

“பேராளர் கூட்டத்தை கோலாலும்பூரில் நடத்தி இருக்கிறோம். சிலாங்கூர், பேராக் ஆகியவற்றிலும் நடத்தி இருக்கிறோம். எனவே, பக்காத்தான் ஆட்சியில் உள்ள இன்னொரு மாநிலத்தில் அதை நடத்துவது இயல்பானதே”, என்று வலியுறுத்தினார்.