12வது நாடாளுமன்றத்தின் நான்காவது தொடரின் மூன்றாவது கூட்டம் நாளை திங்கட்கிழமை கூடுகிறது. பல காரணங்களுக்காக அது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக 51 ஆண்டுகளுக்குப் பின்னர் இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஒரு வழியாக அகற்றப்படவிருக்கிறது. அது குறித்த விவாதம் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவது திண்ணம்.
இரண்டாவதாக கூட்டம் இன்னொரு கட்டிடத்தில் இடைக்காலத்துக்கு நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்றக் கட்டிடம் 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
புதிய இடைக்கால கட்டிடம் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அது ஏற்கனவே பல நோக்கு மண்டபமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த மண்டபம் மக்களவை, மேலவைக் கூட்டங்கள் நிகழ்வதற்கு உதவியாக 21 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய இடம் சிறியதாகும். அதனால் உறுப்பினர்கள் அருகருகே அமர வேண்டியிருக்கும். அதனால் வாக்குவாதங்களும் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மூன்றாவதாக அடுத்த வெள்ளிக் கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கிறார்.
அந்த வரவு செலவுத் திட்டம் 13வது பொதுத் தேர்தலுக்காக 12வது நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் சமர்பிக்கப்படும் கடைசி வரவு செலவுத் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வரவு செலவுத் திட்டம் “பல வியப்புக்களை” கொண்டிருக்கும் என பலர் கருதுகின்றனர். “தேர்தல் வரவு செலவுத் திட்டம்” என வருணிக்கப்படும் அதில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வையும் நஜிப் அறிவிப்பார் என வதந்திகள் பரவியுள்ளன.
நான்காவதாக இசா தவிர 1953ம் ஆண்டுக்கான வசிப்பிடக் கட்டுப்பாட்டு சட்டத்தையும் 1959ம் ஆண்டுக்கான அப்புறப்படுத்தும் சட்டத்தையும் ( Banishment Act 1959) ரத்துச் செய்வதற்கும் 1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் அச்சுக் கூட அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என்ற விதியை அகற்றுவதற்கும் அரசாங்கம் திருத்தங்களை முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பதில் ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் நடைமுறை கொண்டு வரப்படும். ஆனால் அது ரத்துச் செய்யப்பட முடியும்.