பாஸ்: நஜிப் ‘அசைக்க முடியாத’ டாக்டர் மகாதீரைக் கண்டு அஞ்சுகிறார்

அரசியல் எதிரிகளை கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் வேட்டையாடும் ‘அசைக்க முடியாத’ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைக் கண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அஞ்சுவதாக பாஸ் கட்சி கூறிக் கொண்டுள்ளது.

“மகாதீர் விரும்புவதை நஜிப் பின்பற்றுகிறார். தமக்கு பாதகமான கோப்புக்கள் வெளியே வரும் என அஞ்சி அந்த முன்னாள் பிரதமர் சொல்வதை எதிர்த்துப் பேசுவதற்கு அவர் பயப்படுகிறார்,” என அந்த இஸ்லாமியக் கட்சியின் மத்திய செயல் குழு உறுப்பினர் இட்ரிஸ் அகமட் சொன்னார்.

அந்த முன்னாள் பிரதமரை எதிர்க்கும் யாருடைய அரசியல் வாழ்க்கையும் முன் கூட்டியே முடிவுக்கு வந்து விடும் என இட்ரிஸ் மேலும் கூறிக் கொண்டார்.

“எடுத்துக்காட்டுக்கு இன்னொரு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை எடுத்துக் கொள்வோம். அவர் கோணலான பாலத் திட்டத்தை ரத்துச் செய்யத் துணிந்தார். அதனால் இன்று வரை மகாதீர் அவர் மீது விரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் போது எல்லாம் சாடுகிறார்.”

அந்த அசைக்க முடியாத நிலை காரணமாக அம்னோவை ‘நமக்குத் தெரிந்த பிசாசு’ என்று கூறிய பின்னரும் மகாதீர் தப்பித்துக் கொண்டிருப்பதாக இட்ரிஸ் கூறினார்.

பக்காத்தானை ‘தெரியாத தேவதைகள்’ என்றும் தேவதைகள் கூட தவறு செய்கின்றன என்றும் மகாதீர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

மகாதீர் சொன்னது பற்றி நஜிப் மௌனமாக இருக்கிறார். அம்னோவில் உள்ள 3.5 மில்லியன் உறுப்பினர்களுக்கும் ஏன் அந்த மலாய் கட்சியில் உள்ள உலாமாக்களுக்கும் கூட மகாதீரைக் கேள்வி கேட்பதற்கோ அல்லது திருத்துவதற்கோ துணிச்சல் இல்லை.

பாஸ், பக்காத்தான் தலைவர்கள் மட்டுமே அரசியல்வாதியாக மாறிய அந்த மருத்துவ டாக்டருடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சலைப் பெற்றுள்ளனர்.

என்றாலும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு பிசாசு ஆதரவளிக்கிறது எனக் கூறிய தமது கருத்து ஏற்படுத்திய பாதகத்தை குறைப்பதற்கு மகாதீர் முயலுவதாக இட்ரிஸ் நம்புகிறார்.

“அம்னோ ‘நமக்குத் தெரிந்த பிசாசு’ எனக் கூறியதற்குப் பின்னர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்,” என இட்ரிஸ் முடித்துக் கொண்டுள்ளார்.

 

TAGS: