கெப்பாளா பத்தாஸில் நேற்றிரவு நடைபெற்ற 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவைத் தாம் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் மறுத்துள்ளார்.
உடல் நலக் குறைவால் தாம் அதில் பங்கு கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார். அந்த நிகழ்வில் தாம் கலந்து கொள்ள முடியாததற்கான காரணத்தை டிஏபி தலைமையகத்துக்குத் தாம் நேற்றுத் தெரிவித்து விட்டதாகவும் கர்பால் குறிப்பிட்டார்.
அவர் அந்த நிறைவு விழாவில் 10,000 முஸ்லிம்களிடையே பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம் பாஸ் கட்சியையோ அதன் ஆதரவாளர்களையோ தவிர்க்க அல்லது புறக்கணிக்க எண்ணவில்லை என்றார் கர்பால்.
கர்பால் ஏன் அந்த நிகழ்வுக்கு வரவில்லை என்பது தங்களுக்குத் தெரியவில்லை என நேற்றிரவு பாஸ் நிகழ்வில் கலந்து கொண்ட டிஏபி, பாஸ் தலைவர்கள் கூறியிருந்தனர்.
அந்த நிகழ்வில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
“எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக நான் தலைமையகத்திடம் தெரிவித்து விட்டேன். இல்லை. அது புறக்கணிப்பு அல்ல,” பினாங்கில் நிருபர்களிடம் கர்பால் சொன்னார்.
கிளந்தானில் 1993ம் ஆண்டும் திரங்கானுவில் 2003ம் ஆண்டும் இயற்றப்பட்ட ஷாரியா கிரிமினல் சட்டங்களுக்கு தாம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் பாஸ் கூட்டத்தில் விடுத்த அறிக்கை குறித்து தாம் வியப்படைவதாகவும் கர்பால் சொன்னார்.
அந்தச் சட்டங்கள் கூட்டரசு அரசியலமைப்புக்கு இணங்க இல்லை. ஆகவே அது “அரசியலமைப்புக்கு முரணானது,” என்பதே டிஏபி-யின் நிலை என குளுகோர் எம்பி-யுமான அவர் தெளிவுபடுத்தினார்.
நாடு முழுவதும் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என நிக் அஜீஸ் வேண்டிக் கொண்டது பற்றியும் கர்பால் கருத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தாலும் அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்தும் எந்த நடவடிக்கைக்கும் டிஏபி ஒப்புக் கொள்ளாது என்றார் அவர்.