பினாங்கு பிஎன்: கிளந்தான் முடி திருத்தும் நிலையப் பிரச்னையில் டிஏபி மௌனம்

கிளந்தானில் பாஸ் கட்சியின் இஸ்லாமியக் கொள்கைகள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதாரைப் பாதிக்கின்ற விஷயங்கள் குறித்து டிஏபி ஏன் இன்னும் ஏதும் செய்யாமல் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பக்காத்தான் ராக்யாட்டில் தனது தோழமைக் கட்சியான பாஸ் அத்தகைய கொள்கைகளை அமலாக்குவதைத் தான் தடுக்க முடியாமல் போனால் டிஏபி அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என பினாங்கு மாநில பிஎன் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் தான் செங் லியாங் கூறினார்.

“அந்தக் கிழக்குக் கரை மாநிலத்தில் நிகழ்வது அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் வழி நடத்தும் பக்காத்தான் அரசாங்கம் கூட்டரசு அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளுமானால் மலேசியா எப்படி இருக்கும் என்பதற்கு அது ஒரு முன் மாதிரியாகும்,” என தான் நிருபர்களிடம் கூறினார்.

“அது நிகழ்ந்தால் ஈரானில் நடந்ததைப் போன்று மீண்டும் திரும்ப முடியாது,” என அவர் மேலும் கூறினார்.

பெண்கள் ஆண்களுக்கும் ஆண்கள் பெண்களுக்கும் முடி வெட்டுவதை தடை செய்யும் பால்-பிரிவினை அமலாக்கத்தை மீட்டுக் கொள்ள கிளந்தான் அரசாங்கம் மறுப்பது மீது  தான் செங் லியாங்  அவ்வாறு கூறினார்.

அந்த விதிமுறை 10 ஆண்டுகளாக நடப்பில் இருப்பதாக பாஸ் வழி நடத்தும் கோத்தா பாரு நகராட்சி மன்றம் கூறியுள்ளது.

அந்த விதிமுறை ‘அரசமைப்புக்கு முரணானது’ என்று அதனை வருணித்துள்ள டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்குமாறு பாஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொள்ளும் போது பக்காத்தானுக்கு அது ‘பாதகத்தை தரக் கூடிய வெட்டு’ என புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் சொன்னார்.

மலேசியாவை இஸ்லாமிய நாடாக்குவதற்கான தனது போராட்டத்தை பாஸ் ஒரு போதும் கைவிட்டதில்லை என்றும்  தான் செங் லியாங் குறிப்பிட்டார்.

“டிஏபி எவ்வளவு காலத்துக்குப் பாஸ் கட்சிக்கு நல்ல தோற்றத்தைத் தருவதற்கு விரும்புகின்றது என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம்,” என கூறிய அவர்,” வாக்காளர்கள் அந்த விவகாரத்தை தாங்களாகவே மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்றார்.