பெர்சே 2.0, இசி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்திக்கிறது

வாக்காளர் பட்டியலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள முறைகேடுகளை இசி என்ற தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் முறை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பெர்சே 2.0, இசி-யை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வது பற்றி சிந்திக்கிறது.

தன்மூப்பாக வாக்காளர் விவரங்களை திருத்துவது அல்லது நீக்குவது பற்றி இசி அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது என பெர்சே 2.0 அமைப்புத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

“அவர்கள் அதனை- பெயர்களை நீக்குவது, பெயர்களைச் சேர்ப்பது, மாற்றங்களைச் செய்வது-உண்மையில் செய்ய முடியுமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. தாங்கள்  விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவதாகவும்  எண், எழுத்துப் பிழைகளை ( clerical errors ) திருத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகவும் சொல்கின்றனர்”, என அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் அவை எழுத்து, எண் பிழைகள் அல்ல. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதுவும் அன்றாடம் அதனை  செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எந்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் அதனைச் செய்கின்றனர் என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.”

மலேசியாகினி தகவல்கள் அடிப்படையில் “படியாக்கம் செய்யப்பட்ட” வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு இசி எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அம்பிகா கருத்துரைத்தார்.

கணினி முறைக்குள் மை கார்டு எண் சேர்க்கப்படும் போது ஏற்பட்ட மனிதத் தவற்றினால் இரட்டை அடையாளப் பிரச்னை எழுந்துள்ளது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் விளக்கியுள்ளார்.

“ஆவி வாக்காளர்கள்” பிரச்னையைத் தீர்ப்பதற்காக இசி 90 வயதுக்கும் அதற்கும் அதிகமான வயதுடைய 12,000 பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் இசி-உடன் தொடர்பு கொண்டால் அவர்களது பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படும்.”

அது குறித்து கருத்துரைத்த அம்பிகா, பிரச்னைகளை தீர்ப்பதற்கு இசி முழுமையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். தொழில் நுட்பக் கோளாறுகள் எனப் பொதுவாக வகைப்படுத்தி “புனிதமான ஆவணமான” வாக்காளர் பட்டியலைத் தனது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பத் திருத்தக் கூடாது என்றார்.

“இதில் அச்சமளிக்கும் விஷயம்,  அந்த குளறுபடிகள் அம்பலப்படுத்தப்படா விட்டால் இசி எதுவும் செய்திருக்காது எனத் தோன்றுவதாகும். ஆகவே பொது மக்கள் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டுமென அது எதிர்பார்க்கிறதா?”

“நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படக் கூடிய இன்னொரு விஷயம், தேர்தல் தொகுதி எல்லைகள் மறுநிர்ணயம்  செய்யப்படாமல் வாக்காளர்களை இசி எவ்வாறு இடம் மாற்ற முடியும் என்பதாகும்.      

தொகுதி எல்லைகள் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.”

“கடந்த ஆண்டு நிகழ்ந்த உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அது நிகழ்ந்துள்ளது. கடும் போட்டி நிலவிய அந்தத் தேர்தலில் கம்போங் தஞ்சோங்கைச் சேர்ந்த 228 வாக்காளர்கள் அருகிலுள்ள சிலாயாங் தொகுதிக்கு மாற்றப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது,” என அம்பிகா சொன்னார்.

இசி-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அது சட்டத்துக்கு இணங்க தனது கடமையைச் செய்வதைக் கட்டாயப்படுத்தும் என அவர் கருதுகிறார்.

“வாக்காளர்  பட்டியலை எதிர்த்து வழக்காடுவது சிரமம் என எனக்குத் தெரியும். என்றாலும் சட்டத்துக்கு உட்பட்டு இசி செயல்பட வேண்டும் எனக் கூறும் சட்ட விதிகளும் உள்ளதாக நான் நினைக்கிறேன்”, என அவர் சொன்னார். அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளின் பேராளர்களையும் உள்ளடக்கிய சிறப்பு பணிக் குழு ஒன்றை அமைப்பதின் மூலம் வாக்காளர் பட்டியல் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம் என்று பெர்சே 2.0 யோசனை கூறியதாகவும் அம்பிகா சொன்னார். ஆனால் அதற்கு இசி, இது வரை பதில் அளிக்கவே இல்லை.

‘மலேசியர்களை அவமதிக்கிறது’

லண்டன் கலவரங்கள், ஜுலை 9 பெர்சே 2.0 பேரணியை மலேசியா ஒடுக்கியதை நியாயப்படுத்தியுள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும்  தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்காரும் கூறியிருப்பது பற்றிக் குறிப்பிட்ட அம்பிகா அது மலேசியர்களை அவமதிப்பதாக உள்ளது என வருணித்தார்.

“அமைதியை விரும்பும் மலேசிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் அது. நாங்கள், அந்தக் கலகக்காரர்களைப் போன்றவர்கள் என அவர்கள் எந்த வகையில் சொல்ல முடியும்? ”

அந்த பேட்டியின் போது உடனிருந்த மற்ற பெர்சே 2.0 குழு உறுப்பினர்களும் அம்பிகாவின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

குறைந்தது 15,000 பேர் பங்கு கொண்ட பேரணியின் போது “ஒரு பூந்தொட்டி கூட உடையவில்லை. ஒரு காருக்குக் கூட கீறல் ஏற்படவில்லை” என பி ராமகிருஷ்ணன் சொன்னார்.

“அந்தக் கூட்டத்தில் போலீஸின் சில பிரிவுகளே ஒழுங்கு முறையுடன் நடந்து கொள்ளவில்லை,” என ராமகிருஷ்ணன் சொன்னார்.

பிரிட்டிஷ் நிலவரம் குறித்து அதன் மக்கள் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கலகத்துக்கு வித்திட்ட மூல காரணங்களை அடையாளம் காண பிரிட்டிஷ் அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது என தோ கின் வூன் கூறினார்.

அந்த நிலைமை, பெர்சே 2.0 விடுத்த கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் அதனைக் கண்டிக்கும் மலேசிய அரசாங்கத்தின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என அவர் சொன்னார்.

அதனை அம்பிகா ஒப்புக்கொண்டார். “அது பொறுப்புள்ள அரசாங்கம் செய்வதாகும் (பிரிட்டன்). பிரச்னைகள் இல்லாத சமூகமே இல்லை.  பிரச்னைகளை அரசாங்கம் தீர்க்க முயலும்போதுதான் உண்மையான ஜனநாயக சமூகம் பிரதிபலிக்கப்படுகிறது.”

எல்லா சாலை ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களுடன் ஒப்பிடும் மலேசியாவின் வாதம் “கார்கள் விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன. அதனால் மக்கள் கார்களை ஒட்டவே கூடாது” எனச் சொல்வதற்கு ஏற்ப உள்ளது என்றார் அம்பிகா.