கம்போங் பாரு மேம்பாட்டு மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டது

சர்ச்சைக்குரிய கம்போங் பாரு மேம்பாட்டுக் கழக  மசோதாவை இரண்டாவது வாசிப்புக்கு சமர்பிக்கப்படுவதிலிருந்து கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் இன்று மீட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த மசோதாவுக்கு எதிராக தான் நடத்திய போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக பக்காத்தான் ராக்யாட் பிரகடனம் செய்து கொண்டது.

இன்று தொடங்கிய 12வது நாடாளுமன்றத்தின் நான்காவது தொடரில் மூன்றாவது கூட்டத்தில் அமைச்சர் அந்த மசோதாவை மீட்டுக் கொண்டதாக பத்து எம்பி தியான் சுவா தமது டிவிட்டர் பக்கத்தில் அனுப்பிய தகவல் தெரிவித்தது.

“இது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் காலஞ்சென்ற டாக்டர் லோ லோ நடத்திய போராட்டத்துக்கும் வெற்றி,” என அந்த பிகேஆர் உதவித் தலைவர் குறிப்பிட்டார்.

தித்திவாங்சா தொகுதிக்கான பாஸ் எம்பி டாக்டர் லோ லோ கசாலில் இவ்வண்டு மே மாதம் காலமானார்.

பாஸ், அந்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்துக்குத் தலைமை தாங்கியது. அந்த மசோதாவில் கண்டுள்ள நிபந்தனைகள் கம்போங் பாரு குடியிருப்பாளர்களுடனும் அந்த பாரம்பரிய மலாய்க் கிராமத்தின் நில உரிமையாளர்களுடனும் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது.

கம்போங் பாரு மேம்பாட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு ஒரு தொழில் கழகத்தை அமைப்பதற்கு அந்த மசோதா வகை செய்தது. அது 2010ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்டது.

கோலாலம்பூரின் மத்திய மாவட்டத்துக்குள் 90.2 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த 111 ஆண்டுகள் பழமையான கிராமத்தை அந்தத் தொழில் கழகம் நிர்வாகம் செய்யும்.

திருத்தப்பட்ட கோலாலம்பூர் நகல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அந்தப் பகுதி முழுவதும் வர்த்தக மாவட்டமாக மேம்படுத்தப்பட வேண்டும்.

அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்கு நாடாளுமன்றத்தில் மார்ச் மாத கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது தள்ளி வைக்கப்பட்டது.

நில உரிமையாளர்களும் அவர்களது வாரிசுகளும் தங்களது கருத்துக்களை வழங்குவதற்கு உதவியாக அது தள்ளி வைக்கப்படுவதாக ராஜ் நோங் சிக் அப்போது காரணம் கூறினார்.

பின்னர் அந்த மசோதாவுக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. அவை நாடாளுமன்றக் குழு நிலையில் விவாதிக்கப்பட்டன.