கிளந்தான் மாநில அரசாங்கம் இரு பாலருக்கும் முடி திருத்தும் நிலையங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறைகள் குறித்து முஸ்லிம் அல்லாத பேராளர்களுடன் விவாதம் நடத்தவிருக்கிறது.
அந்த விதிகள் தொடர்பாக மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதே விவாதத்தின் நோக்கமாகும்.
அந்தத் தகவலை மாநில தகவல், அறிவியல் தகவல் மேம்பாடு, தொழில்நுட்பக் குழுத் தலைவர் டாக்டர் முகமட் பாட்சிலி ஹசான் இன்று வெளியிட்டார்.
அந்த விவகாரம் மீது விரைவான சிறந்த தீர்வைக் காண்பதற்கு விவாதம் நடத்த கிளந்தான் அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பாஸ் ஆதரவாளர் பேரவை வழங்கிய யோசனைக்கு இணங்க விவாதம் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக அந்தச் செய்தியை வெளியிட்ட பாஸ் ஏடான ஹாராக்கா டெய்லியின் இணையப் பதிப்பு கூறியது.
மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதாரின் தேவைகளைக் கவனிக்க வேண்டிய தேவை இருப்பதை கிளந்தான் அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பாட்சிலி வலியுறுத்தினார். கூடிய விரைவில் முஸ்லிம் அல்லாத பேராளர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்றார் அவர்.
பெண்கள் நடத்தும் முடி திருத்தும் நிலையங்கள் பெண் வாடிக்கையாளர்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்ற விதிமுறை குறித்து அதிகாரத்துவ ஆட்சேபனைகள் இது வரை தெரிவிக்கப்பட்டதில்லை என்றும் அவர் சொன்னதாக ஹாராக்கா டெய்லி தெரிவித்தது.
கோத்தா பாருவில் முடி திருத்தும் நிலையங்கள் இரு பாலருக்கும் சேவை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதால் ஆண் வாடிக்கையாளர் ஒருவருக்கு முடி வெட்டியதற்காக நகராட்சி மன்றம் கடைத் தொகுதி ஒன்றில் முடி திருத்தும் பெண் ஒருவருக்கு குற்றப்பதிவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியான பின்னர் சர்ச்சை மூண்டது.