பக்காத்தான் பரப்புரையைப் புறக்கணிப்பீர்: திரெங்கானு இந்தியர்களுக்கு வலியுறுத்து

மாற்றரசுக் கட்சிகளின் பரப்புரையை நம்ப வேண்டாம் என திரெங்கானு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடும் எதிர்த்தரப்பின் முயற்சிகளை இந்திய சமூகம் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் வான் அப்துல் ஹகிம் வான் மொக்தார், அவர்கள் அரசாங்கம் எப்போதும் தங்கள் நலனைக் கவனித்துக்கொள்வதை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.

மலேசியா தேசிய நிர்மாணிப்புப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பெரும்பான்மை, சிறுபான்மை என எல்லாரது ஆதரவும் தேவை என்றாரவர்.

“அரசாங்கம் இந்திய சமூகத்தின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளது. திரெங்கானுவில் உள்ள இந்தியர்கள் மேம்பாட்டுப் பணிகளின்வழி பல்வேறு துறைகளில் நன்மை அடைந்துள்ளனர்.

“எதிர்த்தரப்பினர் இந்திய சமூகத்தில் உண்மை அல்லாதனவற்றை ப் பரப்ப நாம் இடமளிக்கக் கூடாது. எனவே, இதுகாறும்  அனுபவித்து வந்த அமைதியையும் இன இணக்கத்தையும்  கட்டிக்காக்க நாம் ஒன்றுபட வேண்டும்”. நேற்றிரவு கெமாமான் அருகில் ஜாபோரில் தீபாவளி நிகழ்வு ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் பெர்னாமாவிடம் பேசினார்.

அந்நிகழ்வுக்கு சிறப்பு விவகாரப் பிரிவு (ஜாஸா), தேசிய பாதுகாப்பு மன்றம், லெம்பா ஜாபோர் கிராம மேம்பாடு, பாதுகாப்புக் குழு (ஜேகேகேகே), ஆயர் பூத்தே சமூக சேவை மையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. லெம்பா ஜாபோர் சைம் டார்பி தோட்டத்தில் வேலை செய்வோரும் குவாந்தான், செமாம்பு கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களுமாக சுமார் 300பேர் அதில் கலந்துகொண்டார்கள்.

இதனிடையே, ஜாபோர் தோட்ட ஜேகேகேகே தலைவர் சிவகுமார் ஸ்ரீராமன் பேசுகையில் மலேசியாவில் அமைதியுடன் வாழ்வதற்கு  ஆயர் பூத்தேயில் உள்ள இந்தியர்கள் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

“நாங்கள் ஆயர் பூத்தேயில் 200 பேர் மட்டுமே இருக்கிறோம். ஆனால், நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு வந்ததே இல்லை. உள்கட்டமைப்புப் பணிகளானாலும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களானாலும் எங்களின் கருத்தைக் கேட்கிறார்கள். ஒத்துழைப்பை நாடுகிறார்கள்.

“எங்களுக்கு எல்லாமே திருபதிகரமாக இருக்கிறது. அதனால் நடப்பு அரசாங்கத்தைத் தக்க வைப்பதற்குப் பாடுபடுவோம்”, என்றார்.

 

 

 

TAGS: