ஒங்: என் உருவப் படத்தை அகற்றுங்கள்

மசீச தலைமையகத்திலிருந்து தமது உருவப்படம் அகற்றப்பட்டால் அதனை தாம் பொருட்படுத்தப் போவதில்லை என முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறுகிறார்.

அந்தக் கட்சியில் தாம் விட்டுச் சென்ற தலைமைத்துவப் பாரம்பரியத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது நடப்பு மசீச தலைவர் டாக்டர் சுவா சிய் லெக்-கின் வேலை அல்ல என்றும் அவர் சொன்னார்.

“தார்மீக ரீதியில் ஊழல் மலிந்த” ஒருவருடைய படத்திற்கு அடுத்து தமது படம் தொங்குவதைக் காணத் தாம் விரும்பவில்லை என்பதே அதற்குக் காரணம் என ஒங் சொன்னார்.

சுவா சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோ சர்ச்சை பற்றியே அவர் குறிப்பிட்டார் என்பது தெளிவாகும்.

“அவர் விரும்பினால் மசீச தலைமையகத்திலிருந்து எனது உருவப்படத்தை அகற்றுவதற்கு அவரது கரங்களில் அதிகாரம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக “தார்மீக ரீதியில் ஊழல் மலிந்த” ஒருவருடைய படத்திற்கு அடுத்து ஒருவருடைய படம் தொங்குவது மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயமல்ல,” என ஒங் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

மசீச பொதுப் பேரவையில் சுவா, தம்மைத் தாக்கிப் பேசியதற்கு ஒங் பதில் அளித்தார். மசீச வரலாற்றில் ஒங் “அடிக்குறிப்பு” என சுவா தமது உரையில் வருணித்தார்.

தனது தலைவர்களுடைய படங்களை தலைமையகக் கட்டிடத்தில் தொங்க விடுவது மசீச பாரம்பரியமாகும்.

நம்பிக்கை இழந்து விட்டேன்

கட்சி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அதிலிருந்து விலகுமாறு சுவா விடுத்த அறைகூவலுக்கும் ஒங் பதில் அளித்தார்.

“உண்மை, நான் அவரது தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டேன். ஆனால் 1981ம் ஆண்டு தாம் இணைந்த கட்சியின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது.”

பண்டான் எம்பி பதவியிலிருந்து தாம் விலக வேண்டும் என சுவா கோரியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட 2008ம் ஆண்டு மார்ச் பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதி வாக்காளர்கள் எனக்கு அதிகாரத்தைத் தந்துள்ளனர்,  சுவா-விடமிருந்து அல்ல என ஒங் குறிப்பிட்டார்.

“மசீச தலைவருடைய தனிச் சொத்து இல்லை. எனவே ஒருவருடைய தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்தால் கட்சியை விட்டு வெளியேறுமாறு தமக்கு முன்பு இருந்த எந்தத் தலைவரும் வெளிப்படையாக ஆணையிட்டதில்லை என்பதை அவருக்கு நினைவூட்டுவது என் கடமையாகும்.”

“அவருக்கு ஜனநாயகத்தின் மீது சிறிதளவாவது மரியாதை இருந்தால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப கட்சியை ரகசியக் கும்பலைப் போன்று நடத்தக் கூடாது.”

மசீச தலைமைத்துவம் “காலச் சூழலுக்குப் பொருத்தமில்லாத கட்டத்தை” நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒங், கடுமையாகக் குறை கூறியதைத் தொடர்ந்து சுவா நேற்று தமது மௌனத்தைக் கலைத்தார்.

தமது எண்ணத்தை மீண்டும் வலியுறுத்திய ஒங், சுவா தலைமைத்துவம் மீதான “பொது மக்கள் எண்ணம்” அது என்றார்.