அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதற்கு அன்வாருக்கு ஆற்றல் இல்லை எனக் காட்டும் பொருட்டு நிதி அமைச்சர் என்ற முறையில் தமது சாதனைகளை அன்வார் இப்ராஹிம் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
கோலாலம்பூரில் 66வது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார்.
2009ம் ஆண்டு தாம் நிதி அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தனிநபர் மொத்த உள் நாட்டு உற்பத்தி அளவு 6,700 அமெரிக்க டாலரிலிருந்து இப்போது 9,700 டாலராக உயர்ந்துள்ளதாக நஜிப் சொன்னார்.
அதற்கு நேர்மாறாக அன்வார் நிதி அமைச்சராக இருந்த காலம் 1990களில் ஆசிய நிதி நெருக்கடியைச் சமாளிக்க அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளையே நினைவுக்குக் கொண்டு வரும் என்றார் அவர்.
“1997 முதல் 1998 வரை மலேசியாவைப் பாதித்த ஆசிய பொருளாதார நெருக்கடியின் போது நிதி அமைச்சர் – நான் மீண்டும் சொல்கிறேன் அப்போதைய நிதி அமைச்சரும் இப்போதைய எதிர்த்தரப்புத் தலைவருமான அவர் போதுமான ஆற்றலைக் கொண்ட பொருளாதார நிர்வாகியாக இல்லை,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.