செந்தூல் கம்போங் ரயில்வே குடும்பங்களுக்கு வீடுகள்

கோலாலும்பூர், செந்தூல் கம்போங் ரயில்வேயில் உள்ள 64 குடும்பங்களுக்கு குறைந்த-விலை வீடுகள் அப்பகுதிக்குள்ளேயே கட்டித்தரப்படும்.

அதற்கான கடிதத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி கம்போங் ரயில்வே நிலத்தின் மேம்பாட்டாளரான ஒய்டிஎல் நிறுவனத்துக்குப் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு துணை அமைச்சர் எம்.சரவணன் (வலம்) கூறினார்.

“குறைந்த-விலை வீடுகள், கட்டுமானம் தொடங்கியதும் 18-இலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்”. கம்போங் ரயில்வே குடியிருப்பாளர்களும் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்), ஒய்டிஎல் நிறுவனம் ஆகியவையும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்துக்குப் பின்னர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இனி, எல்லாம் குடியிருப்பாளர்களைப் பொறுத்துள்ளது. அவர்கள் இடத்தைக் காலி செய்து கொடுத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஜனவரி அல்லது பிப்ரவரியில் கால்கோள் விழாவை நடத்த முடியும் என்று நம்புகிறேன்”, என்று கூறியவர் இடைக்காலத்துக்குக் குடியிருப்பாளர்கள் டிபிகேஎல் பரிந்துரைத்துள்ள ஓரிடத்துக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.

இதற்குமுன், நூறாண்டுகளாக அங்கு வசித்துவரும் 70 குடும்பங்கள், அங்கு கெரேதா அப்பி தானா மலாயு பணியாளர்களுக்குக் குடியிருப்புகளும் குறைந்த-விலை வீடுகளும் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

-பெர்னாமா