ஷாரிஸாட் தமது ‘மே 13’ உரையைத் தற்காக்கிறார்

அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய கொள்கை உரையில் தாம் மே 13 பற்றிக் குறிப்பிட்டதில்  எந்தத் தவறும் இல்லை என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார்.

“வரலாற்றை மேற்கோள் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் வரலாற்றையும் மே 13 நிகழ்வுகளையும் நாம் அழிக்க முடியாது.’

“அது வரலாற்றில் மிக இருண்ட நாளாகும். அது ‘வெறுப்பைத் தருகிறது’ என நான் வலியுறுத்துகிறேன்,” என இன்று காலை நிருபர்களிடம் ஷாரிஸாட் சொன்னார்.

மே 13 விஷயம் பற்றி ஷாரிஸாட் தமது உரையில் வாசிக்கவில்லை. ஆனால் விநியோகம் செய்யப்பட்ட, அம்னோ மகளிர் பிரிவு இணையத் தளத்தில் சேர்க்கப்பட்ட அவரது உரையில் அது காணப்பட்டது.

அந்த உரையின் வாசகம் இது தான்: “அம்னோ அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டால் மலாய் சமூகம் ஏமாற்றமடையும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையும் ஆட்டம் காணும்”

“அது இனப் பதற்ற நிலைக்கு வழி வகுத்து 1969 மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என நான் கவலைப்படுகிறேன். நமது நாட்டில் வெறுப்பைத் தரும் அந்த நிகழ்வு மீண்டும் நிகழ்வதைக் காண நாம் விரும்புகிறோமா ? நிச்சயமாக இல்லை,” என அவர் சொன்னதாக உரையின் வாசகத்தில் காணப்படுகின்றது.

TAGS: