தமது புத்தகத்தை விற்பனை செய்ததற்காக நேற்று காலை கைது செய்யப்பட்ட புத்தக ஆசிரியரான சையட் ஹுசேன் அல் அத்தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
66வது அம்னோ பொதுப் பேரவை நிகழும் புத்ரா உலக வாணிக வளாகத்தில் அவர் ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாக் ஹபிப் என்றும் அழைக்கப்படும் அந்த 71 வயதான எழுத்தாளர் நேற்று காலை 11 மணி அளவில் கைது செய்யப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அந்த வளாகத்தில் உள்ள போலீஸ் நடவடிக்கை அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனுடின் அகமட் கூறினார்.
“நாங்கள் அவரை மாலை 4 மணி வாக்கில் ஜாமீனில் விடுவித்தோம்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.
பாக் ஹபிப் எழுதியுள்ள 13 புத்தகங்களையும் போலீஸ் பறிமுதல் செய்தது. அவர் சையட் அப்துல்லா அல்லது Uncle Seekers எனப்படும் வலைப்பதிவாளருடைய தந்தையும் ஆவார்.
போலீசார் அந்த விவகாரத்தை 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1)(சி)ன் கீழும் அவதூறு தன்மைகளைக் கொண்ட அச்சுப் பொருட்களை விநியோகம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 502வது பிரிவின் கீழும் புலனாய்வு செய்வதாக ஜைனுடின் தெரிவித்தார்.
“அவர் எழுதிய புத்தகத்தில் உள்ளடக்கம் மீதான ஆய்வுகள் முடிந்த பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே தமது www.uncleseekers. blogspot.com என்னும் வலைப்பதிவில் ஜோகூர் சுல்தான் மீது அவதூறு கூறியதற்காக சையட் அப்துல்லாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
-பெர்னாமா