பிகேஆர்: நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப் அன்வாருக்கு இணையே இல்லை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் ஒப்பிடுகையில் தாம் சிறந்த நிதிச் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி தமது நிலையை மார் தட்டிக் கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்துள்ளார்.

அஸ்மின் தமது கூற்றுக்கு ஆதரவாக உள்நாடு உற்பத்தி வளர்ச்சி விகிதங்களையும் வழங்கினார். நாடு, அன்வார் நிதி அமைச்சராக இருந்த போது 1992-ல் 8.8 விழுக்காடும்  1993-ல் 9.9 விழுக்காடும் 1994-ல் 9.2 விழுக்காடும் 1995-ல் 9.8 விழுக்காடும் 1996-ல் 10 விழுக்காடும் பொருளாதார நெருக்கடி தொடங்கிய 1997-ல் 7.3 விழுக்காடு வளர்ச்சியையும் பதிவு செய்ததாக அவர் சொன்னார்.

அதற்கு நேர்மாறாக நஜிப் நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ள நஜிப்பின் கீழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-ல் 1.5 விழுக்காடு சுருங்கியது. 2010-ல் 7.2 விழுக்காடும் 2011-ல் 5.1 விழுக்காடும் வளர்ச்சி பதிவு  செய்யப்பட்டன.

“நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நஜிப்பின் பொருளாதார அடைவு நிலை எந்தக் காலத்திலும் அன்வாருடைய சாதனைகளை மிஞ்சியதில்லை,” என அஸ்மின் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“அன்வார் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு முதல் 10 விழுக்காடு ஏற்றம் காணச் செய்தார்.”

“என்றாலும் நஜிப் முதல் ஆண்டில் பொருளாதாரத்தை வேறு திசையில் திருப்பி விட்டார். இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்த வேளையில் மலேசியா இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருக்கின்றது,” என அஸ்மின் மேலும் சொன்னார்.

அன்வார் 1991 முதல் 1998 வரையில் நிதி அமைச்சராக இருந்தார். நஜிப் 2008ம் ஆண்டு மத்தியிலிருந்து இப்போது வரை நிதி அமைச்சராக இருக்கிறார்.

கடன் அடைவு நிலையிலும் இணை இல்லை

நாட்டின் கடன்களை நிர்வாகம் செய்வதிலும் அன்வாரை மிஞ்சுவதற்கு நஜிப் தவறி விட்டதாகவும் அஸ்மின் சொன்னார்.

1992ல் 0.8 விழுக்காடாக இருந்த நாட்டி வரவு செலவுப் பற்றாக்குறையை 1993 தொடக்கம் 1997 வரையில் முறையே 0.2 விழுக்காடு, 2.3 விழுக்காடு, 0.8 விழுக்காடு 0.7 விழுக்காடும் 2.4 விழுக்காடும் உபரியைப் பெறுவதற்கு அன்வார் வகை செய்தார் என்றார் அவர்.

அன்வார் நீக்கப்பட்ட 1998ம் ஆண்டு தொடக்கம் நாடு பற்றாக்குறையைப் பதிவு செய்யத் தொடங்கியது. அது இன்று வரை பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது.

நஜிப்பின் கீழ் 2009ம் ஆண்டு 6.7 விழுக்காடும் 2010ல் 5.4 விழுக்காடும் வரவு செலவுப் பற்றாக்குறையை நாடு எதிர்நோக்கியது. 2011ல் அது 4.8 விழுக்காடாகக் குறைக்கப்பட்டாலும் தேசியக் கடன் அன்வார் காலத்துடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு கூடியது.

“அன்வாருக்கு பின்னர் எல்லா அம்னோ நிதி அமைச்சர்களும் நாட்டின் அளவுக்கு மிஞ்சிய விவேகமில்லாத செலவுகளுக்கு ஆதரவாக கடன் வாங்கும் அணுகுமுறையையே பின்பற்றினார்கள். ஆனால் அதே வேளையில் வருமானம் ஒரே நிலையில் இருந்தது. அதனால் மலேசியா கடன் பிரச்னையில் மூழ்கியுள்ளது,” என்றும் அஸ்மின் குறிப்பிட்டார்.

பெட்ரோனாஸ் கசக்கப்படுகின்றது

அளவுக்கு அதிகமான செலவுகளைச் சமாளிப்பதற்காக பிஎன், பில்லியன் கணக்கான ரிங்கிட்டை பெட்ரோனாஸிடமிருந்து ஆண்டு தோறும் கறந்து வருகின்றது.

நஜிப் பொறுப்பேற்ற பின்னர் அது மிக அதிகமான நிலைக்குச் சென்று விட்டது.

அன்வார் காலத்தில் பெட்ரோனாஸ் ஆண்டுக்கு 3.1 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கத்துக்கு ஆதாய ஈவாகக் கொடுத்து வந்தது.  ஆனல் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி நிதி அமைச்சராக இருந்த போது 2004ல் 9.4 பில்லியன் ரிங்கிட்டாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே 11.0 பில்லியன் ரிங்கிட்டாகவும் 18.0 பில்லியன் ரிங்கிட்டாகவும் 24.0 பில்லியன் ரிங்கிட்டாகவும் அது கூடியது.

நஜிப் தலைமைத்துவத்தில் அந்த அளவு 30 பில்லியன் ரிங்இட்டை 2009ம் ஆண்டு எட்டியது. அதே நிலை இன்றும் தொடருகின்றது என்றார் அவர்.

“மக்கள் அந்தப் புள்ளிவிவரங்களைப் புரிந்து கொண்டு வேறுபாட்டை உணருவர் என நான் நம்புகிறேன்.  குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு பொருளாதாரத்துக்கு உதவும் போக்கை நாட்டுத் தலைமைத்துவம் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார அடைவு நிலை குறித்த உண்மை நிலைகளை திசை திருப்பக் கூடாது.”

அந்த நிகழ்வில் அம்னோவிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக செம்பொர்னா தொகுதி அம்னோ மகளிர் தலைவி கலாசாஹான் ஹாடி அப்துல் சாலாம் அறிவித்தார். தாம் பிகேஆர் கட்சியில் சேருவதாகவும் அவர் சொன்னார்.

அம்னோ உதவித் தலைவருமான அந்தத் தொகுதித் தலைவர் ஷாபியி அப்டால் மீது அதிருப்தி ஏற்பட்டது தாம் விலகிக் கொள்வதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: