அரசாங்கத்திலிருந்து அம்னோ அகற்றப்பட்டால் அது இனப் பதற்ற நிலைக்கு வழி வகுத்து 1969 மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறிய கருத்தை கண்டித்து கிள்ளான் காவல்துறையில் அரசு சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து புகார் செய்துள்ளன.
இன்று மதியம் 3 மணி அளவில் சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளான் காவல்துறை தலைமையகத்தின் முன் ஒன்றுகூடிய 20 அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ‘மே 13 கலவரம்’ பற்றி உரையாற்றிய ஷாரிஸாட் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி புகார் செய்தனர்.
எனினும், ஷாரிஸாட் மீதான புகார்களை முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்த காவல்துறை அதிகாகரிகள், புகார் குறித்து தலைமைப்பீடத்திடம் தொடர்புகொண்டு பேசிய பின்னர் அரசு சார்பற்ற அமைப்புகளிடமிருந்து புகார்களை பெற்றுக்கொண்டனர்.
“அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஷாரிஸாட் அப்துல் ஜலில் ஆற்றிய உரை, இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறிய, சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.
ஷாரிஸாட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிள்ளான் காவல்துறையில் சுமார் 20 புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான அரசியல்வாதிகளின் உரைகளுக்கு இனிமேல் அரசாங்கம் இடமளிக்கக்கூடாது எனவும் சமூகநல செயல்பாட்டாளரான சேரகன் கேட்டுக்கொண்டார்.
கிள்ளான் காவல்துறைக்கு தலைமையகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சுமார் 30-க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களுடன் சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ-வும் கலந்துகொண்டார்.
மே 13 விஷயம் பற்றி ஷாரிஸாட் தமது உரையில், “அம்னோ அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டால் மலாய் சமூகம் ஏமாற்றமடையும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையும் ஆட்டம் காணும். அது இனப் பதற்ற நிலைக்கு வழி வகுத்து 1969 மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என நான் கவலைப்படுகிறேன். நமது நாட்டில் வெறுப்பைத் தரும் அந்த நிகழ்வு மீண்டும் நிகழ்வதைக் காண நாம் விரும்புகிறோமா ? நிச்சயமாக இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.