தேசிய உருமாற்றத் திட்டங்களின் அமலாக்கத்தின் வழி கிடைக்கின்ற நாட்டின் வளப்பத்தை விநியோகம் செய்வதில் பிஎன் அரசாங்கம் எல்லாத் தரப்புக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
பொருளாதாரத் துறையில் இந்த நாடு அடைந்துள்ள வெற்றியை அம்னோ மக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கின்றனர் என அவர் சொன்னார்.
“எடுத்துக்காட்டுக்கு பாஸ் கட்சியும் அதன் சகாக்களும் பெல்டா திவாலாகி விட்டதாகக் கூறினர். பெல்டா மீது வழக்குப் போடுவது பற்றியும் அவர்கள் சிந்தித்தனர். ஆனால் நாம் ஆதாயத்தை விநியோகம் செய்யும் போது அதனைப் பெறுவதற்கு முன் வரிசையில் நிற்கின்றனர்,” என 2012ம் ஆண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டத்தை நேற்று நிறைவு செய்து வைத்துப் பேசிய அம்னோ தலைவருமான நஜிப் சொன்னார்.
இது எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்கு நேர்மாறானது என நஜிப் தெரிவித்தார்.
“அவை என்ன செய்தாலும் முதலில் உதவி பெறுகின்றவர்களை அடையாளம் காண்கின்றன. அவர்கள் அம்னோ ஆட்களாக இருந்தால் அவை கொடுக்க மாட்டா,” என்றார் அவர்.
திவால் சட்டங்கள் மிகவும் இறுக்கமானவை
இதனிடையே திவால் தொடர்பாக புதிய விதிமுறைகளை அரசாங்கம் வரையும் எனவும் பிரதமர் அறிவித்தார். நடப்பிலுள்ள சட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருப்பதாக கருதப்படுகின்றது என்றார் அவர்.
“நாங்கள் சட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய விதிமுறைகளை உருவாக்குவோம். திவாலை எதிர்நோக்குகின்றவர்களுக்கு உதவுவதற்கான வழிகளையும் ஆராய்வோம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் அதனைச் செய்ய முடியாது. ஏனெனில் அவர்களில் சிலர் மில்லியன் கணக்கான ரிங்கிட் கடன்களை வைத்துள்ளனர்.”
இது வரை 120,000 மலேசியக் குடி மக்கள் திவாலானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக நஜிப் மேலும் தெரிவித்தார். அதிலிருந்து மீளுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவே இல்லை என்றும் பிரதமர் சொன்னார்.
“சில சமயங்களில் அது அவர்களுடைய தவறும் இல்லை. அவர்கள் உண்மையில் கடன்காரர்கள் அல்ல. உத்தரவாதம் அளித்தவர்கள் ஆவர். ஆனால் துன்பத்தை அனுபவிப்பது அவர்களே.”
பெரும்பாலும் பெண்களை உள்ளடக்கிய சிறு வணிகர்களுக்கு Amanah Ikhtiar Malaysia வழங்கும் கடன்களின் அளவு நடப்பு 50,000 ரிங்கிட்டிலிருந்து 100,000 ரிங்கிட்டாக கூட்டப்படுவதாகவும் நஜிப் அறிவித்தார்.
“அவர்கள் கடன்களை நல்ல முறையில் திருப்பிச் செலுத்துகின்றனர். அர்ப்பணிப்புத் தன்மை உடைய வணிகர்களாகவும் அந்தப் பெண்கள் திகழுகின்றனர்,’ என அவர் விளக்கினார்
பெர்னாமா