லிம் கிட் சியாங்: யார் சொல்வது சரி ?

பிஎன் புத்ராஜெயாவிலிருந்து அகற்றப்பட்டால் எந்த இன வம்சாவளி அதிகமான இழப்பை எதிர்நோக்கும் என்பதில்  அம்னோவும் மசீச-வும் மாறுபட்ட ஆரூடங்களைச் சொல்கின்றன. அது ஆளுவதற்கான சட்டப்பூர்வத் தன்மையை அவை இழந்து விட்டதைக் காட்டுகின்றது என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

நடந்து முடிந்த அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி காணுமானால் மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவர் எனத் திரும்பத் திரும்ப எச்சரிக்கப்பட்டதை லிம் இன்று விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

அந்த வாதத்தை நிராகரிப்பதாகத் தோன்றும் மசீச பக்காத்தான் ஆட்சி புரிய அனுமதித்தால் அரசியல், பொருளாதார, கல்வி அடிப்படையில் சிரமங்களை எதிர்நோக்குவர் என வலியுறுத்துகிறது என லிம் விளக்கினார்.

அம்னோவும் மசீச-விம் பின்பற்றும் வாதம் “முழுக்க முழுக்க தேசத் துரோகமானது” என்றும் அது வாக்குகளை பிடிப்பதற்காக வெறுப்பைத் தூண்டுகிறது என்றும் சமய, இன ரீதியில் வேறுபட்டு நிற்கும் நிலையை மோசமாக்கும் என்றும் லிம் குற்றம் சாட்டினார்.

அனைவருக்கும் வெற்றி

அதே வேளையில்  பக்காத்தான் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன வேறுபாடின்றி அனைத்துமலேசியர்களும் வெற்றி காண்பதை உறுதி செய்ய பாடுபடுகின்றது என அவர் சொன்னார்.

“பக்காத்தானுக்கும் பிஎன் -னுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு இது தான்… நிச்சயம் யாராவது இழப்பை அடைவது நிச்சயம்– அது அம்னோ புத்ராக்கள், பிஎன் உறுப்புக் கட்சிகளில் உள்ள அதன் சேவகர்கள்,” என்றார் லிம்.

அம்னோவும் மசீச-வும் வெளியிடுகின்ற அந்த வாதங்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியாக் கொள்கைக்கு எதிரானது எனக் கூறிய அவர் அந்த ‘பிரித்து ஆளும்’ நடைமுறைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புத்ரா உலக வாணிக வளாகத்தின் மண்டபங்களில் மூன்று அம்னோ பிரிவுகளின் ஆண்டுப் பொதுக் கூட்டங்கள் தொடங்கியது முதல், வரும் தேர்தலில் அம்னோ மோசமான தோல்விகளைச் சந்தித்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்து விடுவர் என  அடிக்கடி எச்சரிக்கப்பட்டது.

அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலேசியா குழப்பத்தில் மூழ்கி விடும் என்று கூட அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசினும் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலும் கூறினார்கள்.

TAGS: