பாஸ்: நஜிப் தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்

கடந்த வாரம் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிக்கத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவற விட்டு விட்டதின் மூலம் நாட்டை ஏமாற்றி விட்டதாக பாஸ் கட்சி கூறுகின்றது.

“உண்மையில் நஜிப்பின் நிறைவு உரையில் மக்கள் அவருடைய பதிலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் அந்த விஷயத்தை (குற்றச்சாட்டுக்கள்) தொடவே இல்லை,” என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

தற்காப்பு ஒப்பந்த ஒன்றில் பங்கு கிடைப்பதற்கு ஈடாக தாம் நஜிப் குடும்பத்துக்கு நிலம் கொடுத்ததாக வணிகரான தீபக் ஜெயகிஷன் கூறியுள்ளது பற்றி அவர் குறிப்பிட்டார்.

அந்த தீபக் நஜிப்பின் ‘பழைய நண்பர்’ எனவும் துவான் இப்ராஹிம் சொன்னார்.

“விளக்கம் அளிப்பதற்கு அந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருந்தால் பலர் அதனை செவிமடுத்திருக்க முடியும். காரணம் அவரது உரைக்கு ஊடகங்களில் விரிவான இடம் கொடுக்கப்பட்டிருந்தது.” என அவர் மேலும் சொன்னார்.

“இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் கிடைக்காமல் போயிருப்பது தீபக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையோ என்ற பொதுவான எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளன,” என்றார் அவர்.

தீபக் தெரிவித்துள்ள விஷயங்களுக்கு தமது நிறைவு உரையில் பதில் சொல்வதாக அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான அகமட் ஸாஹிட் ஹமிடி கடந்த வாரம் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தமது நிறைவு உரையில் அதனைச் செய்யவில்லை.

அவருக்குப் பதில் நஜிப்பே பதில் சொல்ல வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். காரணம் நஜிப் அம்னோ தலைவரும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவரும் ஆவார்.

ஆனால் அம்னோ தலைவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆண்டுக் கூட்டத்தில் எதுவுமே குறிப்பிடவில்லை.

 

TAGS: