1955ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை ஆட்சேபிக்கும் பொருட்டு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கவாதிகள் இன்று நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் மறியலில் ஈடுபட்டனர்.
உத்தேசத் திருத்தங்கள் தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்றும் அரசாங்கம் அந்த மாற்றங்களை கொண்டு வருவதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
மறியல் காலை மணி 10.55 வாக்கில் தொடங்கியது. மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் உத்தேசத் திருத்தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரும் பதாதைகளை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் வைத்திருந்தனர். அந்தத் திருத்தங்கள் தொழிலாளர் உரிமைகளுக்கு பாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
அவர்களுக்கு ஆதரவாக பெரோடுவா கார் தயாரிப்பு நிறுவன ஊழியர்களும் தேசிய வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும் அங்கிருந்தார்கள்.
அப்போது 50க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் நிலமையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அந்தத் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை சமர்பிப்பதற்காக தாம் அமைச்சர் எஸ் சுப்ரமணியத்தையும் சில முதலாளிகளையும் சற்று நேரத்திற்கு முன்பு சந்தித்தாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் காலித் அத்தான் நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் இதற்குப் பின்னர் விவாதங்களைத் தொடர விரும்புகிறோம்,” என காலித் சொன்னார். அந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.
அந்தத் திருத்தங்கள் இந்த வாரம் சமர்பிக்கப்பட மாட்டாது எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் காத்திருக்கும் போக்கைப் பின்பற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முற்பகல் மணி 11.35க்கு மறியல் முடிவுக்கு வந்தது.
உத்தேசத் திருத்தங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விதிமுறைகளை தாராளமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை தொழிலாளர் உரிமைகளுக்குப் பாதகமாக இருக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.