காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் மாடல் அழகி கே.சுஜாதாவின் திடீர் மரணம் தொடர்பில் செந்தூல் ஓசிபிடி கே.குமரன்மீது சுமத்திய குற்றச்சாட்டை இன்று மீட்டுக்கொண்டார்.
அக்கூற்றச்சாட்டுக்கு எதிராக குமரன் தொடுத்திருந்த அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து மாணிக்கவாசகம் தம் குற்றச்சாட்டை இன்று மீட்டுக்கொண்டார்.
தீர்வின் ஒரு பகுதியாக நான்கு-பாரா கொண்ட அறிக்கை ஒன்றை அவர் நீதிமன்றத்தில் வாசித்தார். அவர், குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளும் விசயத்தை ஒரு மாதத்துக்குள் மக்கள் ஓசை நாளேட்டில் வெளியிட வேண்டும் என்பதும் தீர்வுக்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.
மாணிக்கவாசகம் தம் அறிக்கையில் 2007, ஆகஸ்ட் 3-இல், செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி பேசியதாகவும் அதில் தாம் கூறியது குமரனுக்கு அவமதிப்பை உண்டு பண்ணக்கூடியது என்பதை உணர்வதாகவும் குறிப்பிட்டார்.
“அன்று குமரனைப் பாதிக்கும் வகையில் தாம் சொல்லியதையெல்லாம் தெள்ளத் தெளிவாகவும் மழுப்பாமலும் மீட்டுக்கொள்கிறேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
“அதனால் குமரனின் மதிப்புக்கும் நேர்மைக்கும் ஏதாவது பாதிப்பு அல்லது கேடு நேர்ந்திருந்தால் வருந்துகிறேன். அவ்வாறு கெடுதல் அல்லது பாதிப்பை செய்யும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை”, என்றாரவர்.
மேலும், அக்குற்றச்சாட்டை மறுபடியும் கூறுவதில்லை என்றும் அதை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அறிக்கைகள் வெளியிடுவதில்லை என்றும் மாணிக்கவாசகம் உறுதி கூறினார்.
நீதிபதி அஸ்மாபி அவ்விவகாரத்துக்குக் காணப்பட்ட தீர்வைப் பதிவு செய்து இரு தரப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். வழக்குக்கான செலவுத் தொகை பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
இப்போது புக்கிட் அமானில் பணிபுரியும் குமரனுக்காக வழக்குரைஞர் திவாகரன் வாசுதேவனும் மாணிக்கவாசகத்துக்காக பாணி பிரகாஷும் முன்னிலை ஆனார்கள். குமரன், மாணிக்கவாசகம் இருவருமே நீதிமன்றம் வந்திருந்தனர்.
குமரன் 2007, ஆகஸ்ட் 8-இல், ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் அவர், மக்கள் ஓசையையும் அதன் தலைமை செய்தியாசிரியர் எம்.இராஜேந்திரத்தையும் ஓசை விநியோகிப்பாளரையும் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
சில மாதங்களுக்குமுன்பு, மக்கள் ஓசைக்கு எதிரான குமரனின் வழக்குக்கு சமரச தீர்வு ஒன்று காணப்பட்டு விட்டது.
‘சுஜாதா மரணம் ஒரு தற்கொலை’
குமரன், மாணிக்கவாசகத்தை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று செய்துகொண்டிருந்த மனுவில், சுஜாதா மரணம் தொடர்பில் மக்கள் ஓசையில் வெளியிடப்பட்ட மாணிக்கவாசகத்தின் அறிக்கை, “பொய்யானது, என் கெளரவத்துக்கும் நற்தோற்றத்துக்கும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வாதிகள் நால்வரின் செய்கையால் மக்கள் தம்மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்து செந்தூல் போலீஸ் தலைவர் பணியைச் சரிவட செய்ய முடியாமல் போனது என்றும் அவர் கூறினார்.
சுஜாதா (இடம்) மர்மமான சூழலில் இறந்து போன விவகாரம்தான் இவ்வழக்கு தொடரப்பட்டற்குக் காரணமாகும்.
மாணிக்கவாசகம் செய்த போலீஸ் புகாரின் விளைவாக சுஜாதாவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணை நடத்தப்பட்டது. மரண விசாரணை நடத்திய முகம்மட் பவுசி சே அபு, சுஜாதா தெரிந்தே களைக்கொல்லி மருந்தை உட்கொண்டிருக்கிறார் என்றும் எனவே அவரது மரணத்தில் மோசடி நிகழ்ந்திருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை என்றும் கூறினார்.
“எனவே, அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதே என் கருத்து”, என முகம்மட் பவுசி 2007, ஜூன் 25-இல் தீர்ப்பளித்தார்.