தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வ அதிகாரத்தை அரசாங்கம் பெற்றிருப்பதை உறுதி செய்வதற்காகவே உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வது தாமதப்படுத்தப்படுவதாக சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
“இசா-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதக் கைதிகளை விடுவிக்க நிலை ஏற்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
நடப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதும் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதும் ஒரே சமயத்தில் செய்யப்பட வேண்டும் என அவர் விளக்கினார்.
“பழைய சட்டம் ரத்துச் செய்யப்படுவதற்கும் புதிய சட்டங்கள் அமலாக்கப்படுவதற்கும் இடையில் கால இடைவெளி இருக்கக் கூடாது,” என்றார் நஸ்ரி.
அத்தகைய இடைவெளி ஏற்படுமானால் அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான சட்ட அதிகாரம் அரசுக்கு இல்லாமல் போய் விடும் என அவர் மேலும் சொன்னார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் போது இரண்டு புதிய சட்டங்களும் சமர்பிக்கப்படுவதற்கு தயாராக இருக்கும் போது இசா ரத்துச் செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.