மஇகா ஆண்டுப் பொதுக் கூட்டம் பொதுத் தேர்தலுக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்யும்

வரும் ஞாயிற்றுக் கிழமை மஇகா-வின் 66வது பொதுப் பேரவை தொடங்குகின்றது. பாரிசான் நேசனலுக்கு ஆதரவாக இந்தியர்களை கவருவதற்கான கடுமையான இயக்கத்துக்கு பேராளர்களையும் கீழ் நிலைத் தலைவர்களையும் அந்தப் பேரவை ஆயத்தம் செய்யும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்திய சமூகத்தை மஇகா-வுக்கு ஆதரவாக திசை திருப்பும் என கட்சித் தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் நம்பிக்கை கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பாலான இந்தியர்கள் பிஎன் -னைக் கைவிட்டதால் ஏற்பட்ட பெருந்தோல்விக்குப் பின்னர் பெரும்பான்மை இந்திய வாக்காளர்களுடைய ஆதரவை மீண்டும் பெறுவது கட்சிக்கு முக்கியப் பணியாக இருந்தது என அவர் சொன்னார்.

2008 தேர்தலில் அது போட்டியிட்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் தோல்வி கண்டது.  அது தாப்பா, கேமிரன் ஹைலண்ட்ஸ், சிகாமாட் ஆகியவற்றை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. பின்னர் அது இடைத் தேர்தல் ஒன்றில் உலு சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றியது.

இந்தியர்களுடைய அவலத்தை மஇகா சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை என்றும் அந்த சமூகம் எதிர்நோக்கிய பல பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது என்றும் முருகேசன் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கட்சித் தலைவர் ஜி பழனிவேலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி கூற வேண்டும் என்றார் அவர்.

“மஇகா திட்டங்கள் உண்மையானவை. அவை குறுகிய கால நோக்கத்தை கொண்டவை அல்ல. அவற்றின் விளைவுகளைக் காண காலம் பிடிக்கும்.”

‘இளம் வாக்காளர்களில் 60 முதல் 65 விழுக்காட்டினர் பிஎன் -னைத் தேர்வு செய்கின்றனர்’

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு இளம் வாக்காளர்களில் 60 முதல் 65 விழுக்காட்டினர் பிஎன் -னைத் தேர்வு செய்துள்ளதைக் காட்டுவதாக அவர் சொன்னார். எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை மட்டும் வழங்க முடியும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அவர்கள் நம்புவதாக அவர் சொன்னார்.

“இளைய தலைமுறையினரைக் கவர வேண்டுமானால் அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்பதை அவர்களுக்கு மஇகா தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அவர்களுக்கு உறுதியான சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கு நாடு செல்லும் பாதை இது தான் எனச் சொல்ல வேண்டும்.”

பிஎன் -னுக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்கள் திரும்பிக் கொண்டுள்ள போதிலும் இந்திய வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு மஇகா இன்னும் முயன்று வருவதாகவும் முருகேசன் தெரிவித்தார்.

பேரவையில் விவாதிக்கப்படுவதற்காக ஆறு தீர்மானங்களை கட்சி பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார். அவை அரசியல், அரசாங்க விவகாரங்கள், கல்வி, சமூக பொருளாதார விஷயங்கள் ஆகும். புத்ரா உலக வாணிக வளாகத்தில் நடைபெறும் பேரவையில் 1,500 பேராளர்களும் 2,000 பார்வையாளர்களும் கலந்து கொள்வர்.

நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதற்காக பேரவஒ ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்றும் அதனை பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் தொடக்கி வைப்பார் என்றும் முருகேசன் கூறினார்.

TAGS: