மாற்றம் வேண்டி ஜெரிட் மேற்கொள்ளும் சைக்கிளோட்ட இயக்கம்

நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விழிப்புணர்வு இயக்கத்துடன் வந்துள்ளது ஜாரிங்கான் ரக்யாட் தெர்திண்டாஸ் (ஜெரிட்).  மாற்றத்துக்கான சைக்கிளோட்டம் 2.0 என்னும் அந்த இயக்கம் இன்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

கட்டுப்படியான வீடுகள், தண்ணீர், உணவு, கல்வி முதலிய அடிப்படை வசதிகளைத் தனியார் மயப்படுத்தல், சுற்றுச்சூழலுக்குக் கேடு செய்யும் திட்டங்கள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவருவது அவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டுள்ள ஒரு என்ஜிஓ-வான ஜெரிட்டின் “மாற்றத்துக்கான சைக்கிளோட்டம்” என்னும் அந்த இயக்கம் வரும் வெள்ளிக்கிழமை நெகிரி செம்பிலான், சிரம்பானின் பசார் புசாருக்கு வெளியில் தொடங்கி மாநிலத் தலைநகரிலேயே விஸ்மா நெகிரி செம்பிலானில் திங்கள்கிழமை முடிவுறும்.

அங்கு சமுதாய, பொருளாதார விவகாரங்களில் மக்களின் கவலையை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றை ஜெரிட் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசனிடமும் டிஏபி-இன் அந்தோனி லோக்கிடமும் கொடுக்கும்.

சுயேச்சையான, நியாயமான தேர்தல்கள், தூய்மைக்கேட்டிலிருந்து பூமியைக் காத்தல், போதுமான வீட்டு வசதிகள், பொதுப் பயனீடுகளைத் தனியார்மயப்படுத்துவதை நிறுத்துதல், பணியாளர்களின் நலன் காத்தல், கூட்டம் கூடுவதற்கும் கருத்துரைப்பதற்கும் மக்களுக்குள்ள உரிமையைப் பாதுகாத்தல், மனித உரிமைகளை மீறும் கொடிய சட்டங்களை எடுத்தெறிதல் ஆகியவை மாற்றத்துக்கான சைக்கிளோட்ட இயக்கத்தின் கோரிக்கைகளாகும்.

கிராமப்புறங்கள்மீது கவனம் செலுத்தப்படும்

சைக்கிளோட்டிகள் 23 இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் முறையீடுகளையும் பிரச்னைகளையும் கேட்டறிவார்கள் என்று அந்த இயக்கத்தின் நெகிரி செம்பிலான் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தினகரன் தெரிவித்தார். அந்த இயக்கம் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தும்.

அவ்வியக்கத்துக்கு நாடு முழுவதுமுள்ள இளைஞர்களின் ஆதரவு இருப்பதாக தினகரன் கூறினார். பக்காத்தான் ரக்யாட் கட்சிகளும் அதை ஆதரிக்கின்றன. 

இந்த இயக்கம் நெகிரி செம்பிலானில் தொடங்குவது ஏன் என்று வினவியதற்கு அம்மாநில மக்களிடமிருந்துதான் மிகுதியான ஆதரவு கிடைத்ததாகவும் அங்குள்ள இளைஞர்கள் இயக்கத்தைத் தொடங்க ஆயத்தமாக இருந்தார்கள் என்றும் ஜெரிட் ஒருங்கிணைப்பாளர் எம். சிவரஞ்சனி கூறினார். 

இதுவரை சைக்கிளோட்டத்தில் கலந்துகொள்ள 20 பேர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த சிவரஞ்சனி, நெகிரி செ,ம்பிலானின் மற்ற பகுதிகளிலிருந்து மேலும் பலர் பின்னர் சேர்ந்துகொள்வார்கள் என்றார்.

2008-இல் இதேபோன்று 16-நாள்‘மாற்றத்துக்கான சைக்கிளோட்ட’ இயக்கமொன்றை ஜெரிட் நடத்தியது. நாடு முழுக்க நடத்தப்பட்ட அதில் 150 சைக்கிளோட்டிகள் கலந்துகொண்டார்கள்.