‘அமைதிப் பேச்சு’ செராமாவில் வன்செயலைத் தடுக்கவில்லை

கோம்பாக்கில் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்கு முன்னதாக கோம்பாக் அம்னோ தலைவரும், பாஸ் தலைவரும் சந்தித்துப் பேசினார்கள். என்றாலும் அப்பேச்சுகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் நிகழ்வதைத் தடுக்கவில்லை.

செராமாவுக்கு இரண்டு நாள் முன்னதாக அன்வார் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி கோம்பாக் அம்னோ உறுப்பினர்களுக்குப் பரவலாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்று கோம்பாக் பாஸ் தலைவர் சலேஹுடின் நாசிர் நேற்று கூறினார்.

அக்குறுஞ்செய்தியை மலேசியாகினியிடமும் அவர் காண்பித்தார்.அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “…நீங்கள் (அம்னோ கிளைகள்) எத்தனை அம்னோ இளைஞர்களைத் திரட்ட முடியுமோ அத்தனை பேரைத் திரட்டி அவர் (அன்வார்) கோம்பாக் உத்தாரா வருவதைத் தடுக்க வேண்டும். கோம்பாக் உத்தாரா நமது கோட்டை. அங்கு நடக்கும் செராமாவில் நம் ஆள்களைக் கொண்டு நிரப்புவோம்”.

இந்தச் செய்தியைப் பார்த்ததும் செராமாவின் காரணமாக பதற்றம் தோன்றுவதைத் தடுக்கும் நோக்கில், கோம்பாக் அம்னோ துணைத் தலைவர் அனுவார் சைட் அஹ்மட்டை தாமான் ஸ்ரீகோம்பாக்கில் ஒரு நாள் முன்னதாக திங்கள்கிழமையன்று சந்தித்ததாக சலாஹுடின் கூறினார்.

“அந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு அனுவாரைக் கேட்டுக்கொண்டேன். அவர் குறுஞ்செய்தி உலவுவது தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டு என்னை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்”.

ஆனால் சைட் அனுவார் செவ்வாய்க்கிழமை செராமாவில் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்வதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அது மட்டுமல்ல, பிறகு வன்செயல்கள் நடந்தபின்னர் பிகேஆர் ஆதரவாளர்களே கலகத்தைத் தொடங்கினார்கள் என்றும் குறை சொன்னார்.

அவரிடம் அம்னோ ஆதரவாளர்கள் செராமாவின்போது சினமூட்டும் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்குமாறு தாம் கேட்டுக்கொள்ளவில்லை என்பதை சலாஹுடின் ஒப்புக்கொண்டார். அவர்கள் “சட்டத்தைப் பின்பற்றி ஒழ்ங்காக நடந்துகொள்வார்கள்”, என்று எதிர்பார்த்ததாக அவர் சொன்னார்.

இதுபோக, திங்கள்கிழமை காலை போலீசில் புகார் ஒன்றைப் பதிவு செய்ததுடன் முன் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். 

சைட் அனுவாரைத் தொடர்புகொண்டு பேசியபோது அன்று தாம்  “தற்செயலாக” சலாஹுடினைச் சந்திக்க நேர்ந்ததாகவும் அப்போது அவரிடம் அம்னோ இளைஞர்களும் செராமாவுக்கு வருவார்கள் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

“அவரிடம் (சலாஹுடின்) கவலை வேண்டாம். நாங்கள் வருவோம்.ஆனால், இடையூறு செய்ய மாட்டோம் என்றேன்”, என்று அனுவார் குறுஞ்செய்தியில் பதில் அளித்தார்.

‘பக்காத்தானே வன்செயலைத் தொடங்கியது’

வன்செயல்கள் மூள பக்காத்தானே காரணம் என்றாரவர். அவர்கள்தாம் அங்கிருந்த அம்னோ ஆதரவாளர்களை விரட்டி அடிக்க கற்களையும் தண்ணீர் போத்தல்களையும் வீசி எறிந்தனர்.

ஆனால், சலாஹுடின் அன்றிரவு பக்காத்தான் செராமா நடந்த இடத்துக்கு எதிர்புறத்தில் அம்னோ உறுப்பினர் சிலர் செராமா மேடை ஒன்றை அமைப்பதைப் பார்த்ததாகக் கூறினார்.

“நாங்கள் அமல் பிரிவு உறுப்பினர்களிடம் விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், அம்னோ உறுப்பினர்கள் நாங்கள் அமைத்திருந்த மனித சுவரை இடித்துத்தள்ளப் பார்த்தனர். எங்கள்மீது கற்களை வீசி எறிந்தார்கள்”, என்றார்.

அன்று அன்வாரின் செராமாவில் நிகழ்ந்த வன்செயல்களில் பக்காத்தான் ஆதரவாளர்கள் இருவரும் அம்னோ ஆதரவாளர் ஒருவரும் காயமடைந்தனர்.