மே 13 மருட்டல்கள் தொடர்பில் அரசு சாரா அமைப்புக்கள் அகோங்கிடம் மகஜர் சமர்பிக்கும்

மே 13 இனக் கலவரம் மீது அம்னோ தலைவர்கள் ‘மருட்டல்கள்’ விடுத்துள்ளதைத் தொடர்ந்து அகோங்கிடம் மகஜர் ஒன்றை நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுவும் மற்ற அரசு சாரா அமைப்புக்களும் சமர்பிக்கும்.

அந்தத் தகவலை நியாட் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார்.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் மே 13 மீண்டும் நிகழும் என அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அம்னோ பொதுக் கூட்டத்தில் எச்சரித்த பின்னர் அத்தகைய மகஜர் ஒன்றை உடனடியாகச் சமர்பிப்பது என முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

அம்னோ தலைவர்கள் விடுத்துள்ள மிரட்டல்களை விசாரிக்குமாறு தேசியப் போலீஸ் படைத் தலைவருக்கும் போலீஸ் படைக்கும் அகோங் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மகஜர் கேட்டுக் கொள்ளும்.

அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைப் பக்காத்தான் கைப்பற்றுமானால் அதிகார மாற்றம் சுமூகமாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத் தலைவரையும் அகோங் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த மகஜரில் கூறப்படும்.

மலேசிய உணர்வு அடிப்படையில் மக்களும் தலைவர்களும் போட்டியிட வேண்டும் என்றும் மக்கள் விருப்பம் நடப்பு அரசாங்கத்துக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் அதனை மதிக்க வேண்டும் என்றும் அகோங் அறிவுரை கூற வேண்டும் என்பது இன்னொரு வேண்டுகோளாகும்.

“அச்சமோ மருட்டலோ இல்லாமல் வாக்களிப்பதற்கான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம்” என்னும் தலைப்பைக் கொண்ட அந்த மகஜர் இன்னும் வரையப்படுவதாக தஸ்லீம் தெரிவித்தார்.

அத்துடன் நாங்கள் அம்னோ தலைவர்களுடைய அனைத்து உரைகளையும் தொகுத்து வருகின்றோம் என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

ஷாரிஸாட் தமது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரும் கடிதம் ஒன்றை நியாட் நவம்பர் 3ம் தேதி அவருக்கு அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தின் பிரதிகள் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பிகேஆர் தலைவர் வான் அஜிஸா இஸ்மாயில், டிஏபி தலைவர் கர்பால் சிங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கும்அனுப்பப்பட்டுள்ளன.

200 அரசு சாரா அமைப்புக்கள் அந்த மகஜரை அங்கீகரிக்கும்

அந்த மகஜரை பல்வேறு இன வம்சாவளிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான அரசு சாரா  அமைப்புகள் அப்க்கீகரிக்கும் என நியாட் செயலாளர் டி அருண் கூறினார்.

அம்னோ பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் ஷாரிஸாட்டும் அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசினும் தெரிவித்த கருத்துக்கள் “நியாயமற்றவை” என்றும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை “மீறுகின்றன” என்றும் தஸ்லீம் வருணித்தார்.

மலாய்க்காரர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துள்வதற்குத் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரத்தை இழந்தால் மே 13 போன்ற இன்னொரு இனக் கலவரத்துக்கு வழி ஏற்பட்டு விடும் என ஷாரிஸாட் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் குழப்பம் ஏற்படும் என முஹைடின் குறிப்பிட்டார். காரணம் எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வகையான சித்தாந்தங்களைக் கொண்டுள்ளன என்றார் அவர்.

“அந்த மிரட்டல்களை ஆய்வு செய்யுமாறும் நாங்கள் போலீசையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் கேட்டுக் கொள்வோம். மே 13 மருட்டல்களுக்கு ஏற்ப ரகசிய நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை ஆராயுமாறும் நாங்கள் கேட்டுக் கொள்வோம்,” என்றார் அருண்.

1969ம் ஆண்டு மே 13 நிகழ்ந்த அந்தத் துயரச் சம்பவம் தொடர்பான விவரங்கள் பொது மக்களுக்கு  வெளியிடப்படாததால் அதன் உண்மை நிலைகளை கண்டறிய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் நியாட் கேட்டுக் கொண்டது.